உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்து நீர தானதும்
தண்மையான காயமே தரித்துருவ மானதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே.
வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிவிலாத மாந்தர்காள்
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லிரேல்
அஞ் செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ள லாகுமே.
காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகாள்
ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர்
பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே
வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே.
பேய்கள்பேய்க ளென்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ அனாதிபூசை கொள்ளுமோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே.
மூலமண்ட லத்திலே முச்சதுர மாதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடுவுதித்த மந்திரம்
கோலிஎட் டிதழுமாய் குளிர்ந்தலர்ந்த திட்டமாய்
மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே.
ஆதிகூடு நாடியோடி காலைமாலை நீரிலே
சோதிமூல மானநாடி சொல்லிறந்த தூவெளி
ஆதிகூடி நெற்பறித்த காரமாதி ஆகமம்
பேதபேத மாகியே பிறந்துடல் இறந்ததே.
பாங்கினோ டிருந்துகொண்டு பரமன்அஞ் செழுத்துளே
ஓங்கிநாடி மேலிருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில் வெட்டி நாருரித்து மூச்சில்செய் விதத்தினில்
ஆய்ந்தநூலில் தோன்றுமே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
பண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லிரேல்
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே.
அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே
அன்பனுக்குள் அன்பனாய் நிற்பன்ஆதி வீரனே
அன்பருக்குள் அன்பராய் நின்றஆதி நாயனே
உன்பருக்கு உண்மையாய் நின்றவுண்மை உண்மையே.
அண்ண லாவது ஏதடா அறிந்துரைத்த மந்திரம்
தண்ண லான வந்தவன் சகலபுராணங் கற்றவன்
கண்ண னாக வந்தவன் காரணத் துதித்தவன்
ஒண்ண தாவது ஏதடா உண்மையான மந்திரம்.
உள்ளதோ புறம்பதோ உயிரொடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்
உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ள வாசலைத் திறந்து காணவேணும் அப்பனே.
ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும்
சேரவந்து போயிந்த தேகமேது செப்புமே.
என்னகத்துள் என்னை நானெங்குநாடி ஓடினேன்
என்னகத்துள் என்னை நானறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னை நானறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னையன்றி யாது மொன்றுமில்லையே.
விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கும் ஆறுபோல்
என்னுள் நின்று எண்ணுமீச ன்என்ன கத்துஇருக்கையில்
கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறிவி லாமையால்
என்னுள்நின்ற என்னையும் யானறிந்த தில்லையே.
அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினிம் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினுங் கிலேசம் வந்திருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங்கு ஒலிக்குமே.
மட்டுலாவு தண்டுழாய் அலங்கலாய் புனற்கழல்
விட்டுவீழில் தாகபோக விண்ணில் கண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்
கட்டிவீடி லாதுவைத்த காதலின்பம் ஆகுமே.
ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்தியன்றி முத்தியாய்
நாகமுற்ற சயனமாய் நலங்கடல் கடந்ததீ
யாகமுற்றி யாகிநின்ற தென்கொலாதி தேவனே.
மூன்றுமுப்பத்து ஆறினோடு மூன்றுமூன்று மாயமாய்
மூன்றுமுத்தி ஆகிமூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்றுசோதி மூன்றதாய் துலக்கமில் விளக்கதாய்
ஏன்றனாவின் உள்புகுந்த தென்கொலோ நம்ஈசனே.
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அல்லவத்துள் ஆயுமாய்
ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்றஆதி தேவனே
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்து நின்றநீ
ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை யாவர்காண வல்லரே.
ஆறும்ஆறும்ஆறுமாய் ஓரைந்துமைந்தும் ஐந்துமாய்
ஏறுசீரிரண்டுமூன்றும் ஏழும்ஆறும் எட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறுமோசை யாய்அமர்ந்த மாயமாய மாயனே.
எட்டும்எட்டும் எட்டுமாய் ஓரேழும்ஏழும் ஏழுமாய்
எட்டுமூன்றும் ஒன்றுமாகி நின்றஆதி தேவனே
எட்டுமாய பாதமோடு இறைஞ்சிநின்ற வண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல்நீங்கி நிற்பரே.
பத்தினோடு பத்துமாய் ஓரேழினோடும் ஒன்பதாய்
பத்துநாற் திசைக்குள்நின்ற நாடுபெற்ற நன்மையா
பத்துமாய் கொத்தமோடும் அத்தலமிக் காதிமால்
பத்தர்கட்க லாதுமுத்தி முத்திமுத்தி யாகுமே.
வாசியாகி நேசமொன்றி வந்தெதிர்ந்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர் பவங்களில்
வீசிமேல் நிமிர்ந்ததோளி யில்லையாக்கி னாய்கழல்
ஆசையால் மறக்கலாது அமரராகல் ஆகுமே.
எளியதான காயமீது எம்பிரான் இருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான சோதியுங் குலாவிநின்றது அவ்விடம்
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே.
அஞ்செழுத்து மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்து மூன்றெழுத்தும் அல்ல காணு மப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்து மூன்றெழுத்தும் அவ்வுபாயஞ் சிவாயமே.
பொய்யுரைக்க போதமென்று பொய்யருக் கிருக்கையால்
மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால்
வையகத்தில் உண்மைதன்னை வாய்திறக்க அஞ்சினேன்
நையவைத்தது என்கொலோ நமசிவாய நாதனே.
ஒன்றையொன்று கொன்றுகூட உணவுசெய் திருக்கினும்
மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்
பன்றிதேடும் ஈசனைப் பரிந்துகூட வல்லிரேல்
அன்றுதேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
மச்சகத்துளே இவர்ந்து மாயைபேசும் வாயுவை
அச்சகத் துளேயிருந்து அறிவுணர்த்திக் கொள்விரேல்
அச்சகத் துளேயிருந்து அறிவுணர்த்தி கொண்டபின்
இச்சையற்ற எம்பிரான் எங்குமாகி நிற்பனே.
வயலிலே முளைத்த செந்நெல் களையதான வாறுபோல்
உலகினோரும் வண்மைகூறில் உய்யுமாற துஎங்ஙனே
விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே.
ஆடுகின்ற எம்பிரானை அங்குமெங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்த தொன்றை ஓர்கிலீர்
காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை
நாடியோடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.
ஆடுகின்ற அண்டர் கூடும் அப்புற மதிப்புறம்
தேடுநாலு வேதமும் தேவரான மூவரும்
நீடுவாழி பூதமும் நின்றதோர் நிலைகளும்
ஆடுவாழின் ஒழியலா தனைத்துமில்லை இல்லையே.
ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானும்அப் பரத்துளே.
ஏழுபார் ஏழுகடல் இபங்களெட்டு வெற்புடன்
சூழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும்
ஆழிமால் விசும்புகொள் பிரமாண்டரண்ட அண்டமும்
ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் ஒடுங்குமே.
கயத்துநீர் இறைக்கிறீர் கைகள் சோர்ந்து நிற்பதேன்
மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதியிலாத மாந்தர்காள்
அகத்துள்ஈரங் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லிரேல்
நினைத்திருந்த வோதியும் நீயும்நானும் ஒன்றலோ.
நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர்
ஆரையுன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழும்
சீரையுன்ன வல்லிரேல் சிவபதம் அடைவிரே.
பத்தொடொத்த வாசலில் பரந்துமூல வக்கர
முத்திசித்தி தொந்தமென்று இயங்குகின்ற மூலமே
மத்தசித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே
அத்தியூரர் தம்முளே அமைந்ததே சிவாயமே.
அணுவினோடும் உண்டமாய் அளவிடாத சோதியை
குணமதாகி உம்முளே குறித்திருக்கின் முத்தியாம்
முணமுணென்று உம்முளே விரலையொன்றி மீளவும்
தினந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே.
மூலமான அக்கர முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற மூடமேது மூடரே
காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால்
ஆதியோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ.
முச்சதுர மூலமாகி முடிவுமாகி ஏகமாய்
அச்சதுர மாகியே அடங்கியோர் எழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கு மந்திரத்தின் உண்மையே சிவாயமே.
வண்டலங்கள் போலுநீர் மனத்துமாசு அறுக்கிலீர்
குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகிறீர்
பண்டும்உங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான்
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே.
நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூரிதன்று
பந்தமன்று வீடுமன்று பாவகங்கள் அற்றது
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே.
பொருந்துநீரும் உம்முளே புகுந்துநின்ற காரணம்
எருதிரண்டு கன்றைஈன்ற வேகமொன்றை ஓர்கிலீர்
அருகிருந்து சாவுகின்ற யாவையும் அறிந்திலீர்
குருவிருந்த உலாவுகின்ற கோலமென்ன கோலமே.
அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ
சிம்புளாய்பரந்துநின்ற சிற்பரமும் நீயலோ
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோக மாதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே.
ஈரொளிய திங்களே இயங்கிநின்றது அப்புறம்
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர்
காரொளிப் படலமுங் கடந்துபோன தற்பரம்
பேரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே.
கொள்ளொணாது மெல்லொணாது கோதறக் குதட்டொணா
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத் துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின்உட்பயன்
விள்ளொணாத பொருளைநான் விளம்பு மாறது எங்ஙனே.
வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால்,
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்,
நோக்கொணாத நோக்குவந்து நோக்க நோக்க நோக்கிடில்,
நோக்கொணாத நோக்குவந்து நோக்கைஎங்கண் நோக்குமே.
உள்ளினும் புறம்பினும் உலகம்எங்க ணும்பரந்து
எள்ளில் எண்ணெய்போலநின்று இயங்கு கின்ற எம்பிரான்
மெள்ளவந்து என்னுட்புகுந்த மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே.
வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால்
போதம்நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய்
சோதியுள் ஒளியுமாய்த் துரியமோடு அதீதமாய்
ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே.
சாணிரு மடங்கினால் சரிந்த கொண்டை தன்னுளே
பேணியப் பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லிரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே.
அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால்
நெஞ்சுகூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்
அஞ்சுமோர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே.
Sivavakiyam Couplet,சிவவாக்கியர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,sivavakkiyar padalgal in tamil lyrics,devotional songs,Poet Sivavakkiyar