பூவுநீரு மென்மனம் பொருந்துகோயில் என்னுளம்
ஆவியோடு லிங்கமாய் அகண்டமெங்கு மாகிலும்
மேவுகின்ற ஐவரும் விளங்குதீப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்திசந்தி இல்லையே.
உருக்கலந்த பின்னலோ உன்னை நானறிந்தது
இருக்கிலென் மறக்கிலென் நினைந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே.
சிவாயம்அஞ் செழுத்திலே தெளிந்துதேவர் ஆகலாம்
சிவாயம்அஞ் செழுத்திலே தெளிந்துவானம் ஆளலாம்
சிவாயம்அஞ் செழுத்திலே தெளிந்துகொண்ட வான் பொருள்
சிவாயம்அஞ் செழுத்துளே தெளிந்து கொள்ளும் உண்மையே.
பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கி போகம்வீசு மாறுபோல்
இச்சடமும் இந்தியமும் நீருமேல் அலைந்ததே
அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறுபோல்
இச்சடஞ் சிவத்தை மொண்டுகர்ந்துஅமர்ந் திருப்பதே.
பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை
பார்வையாலே பார்த்துநீ படுமுடிச்சி போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை.
அல்லிறந்து பகலிறந்து அகப்பிரமம் இறந்துபோய்
அண்டரண்ட முங்கடந்த அனேகனேக ரூபமாய்
சொல்லிறந்து மனமிறந்த சுகசொரூப உண்மையைச்
சொல்லியாற் என்னில் வேறு துணைவரில்லை ஆனதே.
ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே.
அங்கலிங்க பீடமும் அசவைமூன் றெழுத்தினும்
சங்குசக்க ரத்தினும் சகலவா னகத்தினும்
பங்குகொண்ட யோகிகள் பரமவாசல் அஞ்சினும்
சிங்கநாத ஓசையும் சிவாயமில்லது இல்லையே.
அஞ்செழுத்து மூன்றெழுத்தும் என்றுரைத்த வன்பர்காள்
அஞ்செழுத்து மூன்றெழுத்து ம்அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்து நெஞ்செழுத்து அவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்து அவ்வின்வண்ண மானதே சிவாயமே.
ஆதரித்த மந்திர ம்அமைந்தஆக மங்களும்
மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ வெங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே.
அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ
மிக்க வந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே.
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராமவென்னு நாமமே
வன்மமான பேர்கள் வாக்கில் வந்துநோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே.
அள்ளிநீரை இட்டதே தகங்கையில் குழைத்ததேது
மெள்ளவே மிணமிணென்று விளம்புகின்ற மூடர்கள்
கள்ளவேடம் இட்டதேது கண்ணை மூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர்.
அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
முன்னையே தரித்ததும் பனித்துளிபோ லாகுமோ
உன்னிதொக் குளழலுந் தூமையுள்ளுளே அடங்கிடும்
பின்னையே பிறப்பதுந் தூமைகாணும் பித்தரே.
அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த தவ்விடம் அழுக்கிலாதது எவ்விடம்
அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சோதியோடு அணுகிவாழ லாகுமே.
அணுத்திரண்ட கண்டமாய் அனைத்துபல்லி யோனியாய்
மணுப்பிறந் தோதிவைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பதேது சாவதேது தாபரத்தின் ஊடுபோய்
நினைப்பதேது நிற்பதேது நீர்நினைந்து பாருமே.
ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை
பேதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகாள்
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே.
ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகார ணத்திலே
நாக்குமூக்கை யுள்மடித்து நாதநாடி யூடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல்
பார்க்கப்பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே.
அஞ்சுமஞ்சு மஞ்சுமஞ்சு மல்லல்செய்து நிற்பதும்
அஞ்சுமஞ்சு மஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சுமஞ்சு மஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சுமஞ்சு மும்முளே அமர்ந்ததே சிவாயமே.
அஞ்செழுத்தின் அனாதியாய் அமர்ந்துநின்றது ஏதடா
நெஞ்செழுத்தி நின்று கொண்டு நீசெபிப்பது ஏதடா
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரிந்துரைக்க வேண்டுமே.
உயிரிருந்தது எவ்விடம் உடம்பெடுத்த தின்முனம்
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா
உயிரையும் உடம்பையு ம்ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம் பெடுத்த உண்மைஞானி சொல்லடா.
சுழித்தவோர் எழுத்தையுஞ் சொன்முகத்து இருத்தியே
துன்பவின்ப முங்கடந்து சொல்லுமூல நாடிகள்
அழுத்தமான வக்கரம் அடங்கியுள் எழுப்பியே
ஆறுபங்கயம் கலந் தப்புறத் தலத்துளே.
உருத்தரிப்ப தற்குமுன் னுயிர்புகுந்து நாதமும்
கருத்தரிப்ப தற்குமுன் காயமென்ன சோணிதம்
அருள்தரிப்ப தற்குமுன் அறிவுமூலா தாரமாம்
குருத்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடுங் குருக்களே.
எங்குமுள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்றுஅ ணுகிலார்
எங்கள் தெய்வம்உங்கள் தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மைஇரண்டும் இல்லையே.
அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கு மொன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்றபாத மொன்றலோ
விரிவதென்று வேறுசெய்து வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாருமிங்கு மங்குமெங்கு மொன்றதே.
வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமுந் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினஞ்செபிக்கு மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன்வந்து இயங்குமே.
அகாரகா ரணத்திலே அனேகனேக ரூபமாய்
உகாரகா ரணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகாரகா ரணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகாரகா ரணத்திலோ தெளிந்ததே சிவாயமே.
அவ்வெழுத்தில் உவ்வுவந்த காரமுஞ் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்து மொன்றை யொன்றி நின்றதோ
செவ்வையொத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வை யொத்த ஞானிகாள் விரித்து ரைக்க வேணுமே.
ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே.
வானிலாத தொன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாத தொன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நானிலாத தொன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாத தொன்றுமே தயங்கியாடு கின்றதே.
சுழித்ததோர்எழுத்தையுன்னி சொல் முகத்திருத்தியே
துன்பஇன்ப முங்கடந்து சொல்லும்நாடி யூடுபோய்
அழுத்தமான வக்கரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறுபங்கயங் கடந் தப்புறத்து வெளியிலே.
விழித்தகண் குவித்தபோது அடைந்து போயெழுத்தெலாம்
விளைத்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே.
நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி ஓடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதனுண்டு நம்முளே
எல்லமஞ் சனங்கள் தேடி ஏக பூசை பண்ணினால்
தில்லைமேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே.
உயிரகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன்
உயிரகாரம் ஆயிடும் உடலுகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்ப தச்சிவம்
உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கிறேன்.
அண்டமேழும் உழலவே அணிந்த யோனி உழலவே
பண்டுமால் அயனுடன் பரந்துநின்று உழலவே
எண்டிசை கடந்துநின்ற இருண்டசத்தியு உழலவே
அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே.
உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசையொத்த மூடரே
கரியமாலும் அயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக வும்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்னபே ருரைக்கிறீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத் தளிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த வொன்றை நெஞ்சிலுன்னுமே.
நாலதான யோனியுள் நவின்றவிந்தும் ஒன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.
அருவமா யிருந்தபோது அன்னையங்கு அறிந்திலை
உருவமா யிருந்தபோது உன்னைநா னறிந்தனன்
குருவினால் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரம்ம மானதே.
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடா திருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீட டங்குமே.
கண்ணிலே யிருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே யிருப்பனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே யிருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே யிருப்பனே எங்குமாகி நிற்பனே.
ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே.
எள்ளிரும்பு கம்பிளி யிடும்பருத்தி வெண்கலம்
அள்ளியுண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வஸ்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதான மீதிரால்
மெள்ளவந்து நோயனைத்து மீண்டிடுஞ் சிவாயமே.
ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத் திழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் பிரளிபாரும் பாருமே.
மருள் புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரம் கொண்டுநீந்த வல்லிரேல்
குருக்கொடுத்த தொண்டரும் குகனொடிந்த பிள்ளையும்
பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே.
அன்னைகர்ப்ப அறையதற்குள் அங்கியின் பிரகாசமாய்
அந்தறைக்குள் வந்திருந்து அரியவிந்து ரூபமாய்
தன்னையொத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே.
உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ
உள்ளமீது உறைந்தெனை மறப்பிலாத சோதியை
பொன்னைவென்ற பேரொளிப் பொருவிலாத ஈசனே
பொன்னடிப் பிறப்பிலாமை யென்று நல்கவேணுமே.
பிடித்ததெண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோல மத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லிரேல்
திடுக்கமுற்ற ஈசனைச் சென்றுகூட லாகுமே.
சத்திநீ தயவுநீ தயங்குசங்கின் ஓசைநீ
சித்திநீ சிவனுநீ சிவாயமாம் எழுத்துநீ
முத்திநீ முதலுநீ மூவரான தேவர்நீ
அத்திறமும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே
பொஸ்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே
நிட்டையேது ஞானமேது நீரிருந்த அக்ஷரம்
பட்டையேது சொல்லிரே பாதகக் கபடரே.
Sivavakiyam Couplet,சிவவாக்கியர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,sivavakkiyar padalgal in tamil lyrics,devotional songs,Poet Sivavakkiyar