என்னைஅற்ப நேரமும் மறக்கிலாத நாதனே
ஏகனே இறைவனே இராசராச ராசனே
உன்னையற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமோ
உனதுநாட்டம் எனதுநாவி லுதவி செய்வீரீசனே.
எல்லையற்று நின்ற சோதி ஏகமாய் எரிக்கவே
வல்லபூர ணப்பிரகாசர் ஏகபோக மாகியே
நல்லவின்ப மோனசாகரத்திலே அழுத்தியே
நாடொணாத அமிர்தமுண்டு நானழிந்து நின்றநாள்.
ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை
ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லிரே
ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம்
வானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே.
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
கத்தியே கதறியே கண்கள் மூடி என்பயன்
எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ
வத்தனுக் கிதேற்குமோ அறிவிலாத மாந்தரே.
எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல்
கட்டமான பிறவியென் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே.
உண்மையான மந்திர மொளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்துரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்துநீற தானதே
உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே.
பன்னிரண்டு நாளிருத்திப் பஞ்சவண்ணம் ஒத்திட
மின்னியவ் வெளிக்குள்நின் றுவேரெடுத் தமர்ந்தது
சென்னியான தலத்திலே சீவன்நின் றியங்கிடும்
பன்னியுன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்ம மாவரே.
தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரந் தலங்களாய்
முச்சுடரும் மூவிரண்டு மூண்டெழுந்த தீச்சுடர்
வச்சிரம் அதாகியே வளர்ந்துநின்றது எவ்விடம்
இச்சுடரும் இந்திரியமும் மேகமானது எங்ஙனே.
முத்திசித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்றுஉதித்த ஐம்புலன்கள் ஆகுமத்தி அப்புலன்
அத்தனித்த காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித் துளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே.
அண்ணலார் அநாதியாய் அநாதிமு னநாதியாய்
பெண்ணுமாணு மொன்றலோ பிறப்பதாகு முன்னலோ
கண்ணிலானில் சுக்கிலங் கருத்தொடுங்கி நின்றபின்
மண்ணுளோரு விண்ணுளோரு வந்தவாற தெங்கனே.
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன் எம்பிரான்
முத்தியான விந்துளே முளைத்தெழுந்து செஞ்சுடர்
சித்தினில் தெளிந்தபோது தேவர் கோயில் சேர்ந்தனன்
அத்தனாடல் கண்டபோது அடங்கியாடல் உற்றதே.
வல்லவாசல் ஒன்பது மருத்தடைத்த வாசலும்
சொல்லும் வாசல்ஓரைந்துஞ் சொல்லவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்ப தில்லையே.
ஆதியான தொன்றுமே அனேகரூப மாயமாய்ப்
பேதபேத மாயெழுந்து சர்வசீவ னானபின்
ஆதியோடு கூடிமீண் டெழுந்து சன்ம மானபின்
சோதியான ஞானியரும் சத்தமாய் இருப்பரே.
வண்டுபூ மணங்க ளோடு வந்திருந்த தேனெலாம்
உண்டுளே அடங்குவண்ண மோதுலிங்க மூலமாய்க்
கண்டுகண்டு வேரிலே கருத்தொடுங்க வல்லிரேல்
பண்டுகொண்ட வல்வினை பறந்திடும் சிவாயமே.
ஓரெழுத்து லிங்கமாக வோதுமக் கரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே.
தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும்
பாரபாரம் என்றுமே பரித்திருந்த பாவிகாள்
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல்
தூரதூர தூரமும் தொடர்ந்து கூட லாகுமே.
குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கடோறும் மூழ்கிறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்தின்மா சறுக்கிலீர்
மண்டையேந்து கையரை மனத்திருத்த வல்லிரேல்
பண்டைமால் அயன்றொழப் பணிந்து வாழ லாகுமே.
கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்
ஆடிரண்டு கன்றைஈன்ற அம்பலத்துள் ஆடுதே
மாடுகொண்டு வெண்ணெயுண்ணும் மானிடப் பசுக்களே
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே.
உள்ளதோ பிறப்பதோ உயிர்ப்படங்கி நின்றிடும்
மெள்ளவந்து கிட்டநீர் வினவவேண்டு மென்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ள வாசலைத் திறந்து காணவேண்டு மாந்தரே.
நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பஞ் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரமேதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவை அறியுமோ.
நானும்அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன்
வானில்உள்ள சோதி அல்ல சோதிநம்முள் உள்ளதே
நானும்நீயும் ஒத்தபோது நாடிக்காண லாகுமோ
தானதான தத்ததான தானதான தானனா.
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில்நிற்பது ஒன்றுதான்
நல்லதென்ற போதது நல்லதாகி நின்றுபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்று நாடிநின்று நாமம் சொல்ல வேண்டுமே.
பேய்கள்கூடிப் பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள்சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா !
தாய்கள்பால் உதிக்கும்இச்சை தவிரவேண்டி நாடினால்
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கிப்பாரும் உம்முளே.
உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில்நீ
அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா
தப்பிலிப்பொய் மானம் கெட்ட தடியனாகும் மனமேகேள்;
ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே.
பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதைமக்கள் தெரிகிலாது
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தெனக்
குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ
நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே?
சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத்
திட்டநெட்டு எழுத்தறியாது ஏங்கிநோக்கு மதிவலீர்
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ?
கட்டவிழ்த்துப் பிரமன் பார்க்கில் கதிஉமக்கும் ஏதுகாண்.
வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே
காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ?
ஆதிநாதன் வெண்ணெயுண்ட அவனிருக்க நம்முளே
கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே.
பரம்இலாதது எவ்விடம்? பரம் இருப்பது எவ்விடம்?
அறம் இலாத பாவிகட்குப் பரம்இலை அஃது உண்மையே;
கரம் இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது
பரம் இலாத சூன்யமாகும் பாழ் நரகம் ஆகுமே.
மாதர் தோள்சேராத தேவர் மானிலத்தில் இல்லையே !
மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ் சிறக்குமே
மாதராகுஞ் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே.
சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள் !
சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர்
சித்தர் இங்கு இருந்தும் என்னபித்தன் நாட்டிருப்பரே;
அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களுக்கெ லாமொன்றே.
மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே
சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லிரேல்
வேந்தன் ஆகி மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம்
கூந்தலம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாதுஇஃது உண்மையே.
சருகருந்தி நீர் குடித்துச் சாரல்வாழ் தவசிகாள் !
சருகருத்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே;
வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே.
காடுமேடு குன்றுபள்ளம் கானின் ஆறகற்றியும்
நாடு தேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ?
கூடுவிட்டு அகன்றுஉன் ஆவி கூத்தனூர்க்கே நோக்கலால்
வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே.
கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
வெட்ட வெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.
தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்து ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே.
ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச் செய் பாதகர்
காசினியில் ஏழுநரகைக் காத்திருப்பது உண்மையே.
நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர் தம் இட்டுமே
மோசம் பொய்புனை சுருட்டு முற்றிலும்செய் மூடர்காள் !
வேசரிக ளம்புரண்ட வெண்ணீறாகும் மேனியே.
வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும்
போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தாவெனச்
சாதனை செய் தெத்திச் சொத்து தந்ததைக் கவர்ந்துமே
காததூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே.
யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.
காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர்
நேயமாக் கஞ்சா அடித்து நேர் அபினைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.
நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று
ஊரினில் பறை அடித்து உதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்கு ஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர் பொருளை நீளவும் கைப்பற்றுவார்.
காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம் யோகத் தண்டு கொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம் எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டு அலைவரே.
முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனச்
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே.
செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடு செய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல்
இம்மளமும் மும்மளமும் எம்மளமும் அல்லவே.
எத்திசை எங்கு எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ?
பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள் !
முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே.
கல்லு வெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லைஅற் றிடப்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர்
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே.
இச்சகம் சனித்ததுவும் ஈசன்ஐந்து எழுத்திலே
மெச்சவும் சராசரங்கள் மேவும் ஐந்து எழுத்திலே
உச்சிதப் பலஉயிர்கள் ஓங்கல் அஞ்செழுத்திலே
நிச்சயமெய்ஞ் ஞானபோதம் நிற்கும் ஐந்தெழுத்திலே.
சாத்திரங்கள் பார்த்துப் பார்த்து தான் குருடு ஆவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்கள் !
பாத்திரம் அறிந்து மோன பக்திசெய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே.
மனவுறுதி தானிலாத மட்டிப்பிண மாடுகள்
சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர்
இனமதில் பலர்கள் வையும்; இன்பம் அற்ற பாவிகள்.
சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம் எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே.
Sivavakiyam Couplet,சிவவாக்கியர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,sivavakkiyar padalgal in tamil lyrics,devotional songs,Poet Sivavakkiyar