சிவவாக்கியர்
TAGS:
Sivavakiyam Couplet,சிவவாக்கியர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs 550 couplet,550 songs,civavakiyam,sivavakkiyar padalgal in tamil lyrics,devotional songs,Poet Sivavakkiyar



ஊன்றியேற்றி மண்டலம் உருவிமூன்று தாள்திறந்து
ஆன்றுதந்தி ஏறிடில் அமுர்தம் வந்திறங்கிடும்
நான்றி தென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்
ஆன்றியும் உயிர்பரம் பொருந்தி வாழ்வ தாகவே.


ஆகமூல நாடியில் அனலெழுப்பி அன்புடன்
மோகமான மாயையில் முயல்வது மொழிந்திடில்
தாகமேரு நாடியேகர் ஏகமான வாறுபோல்
ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே.


அறிந்துநோக்கி உம்முளே அயன்தியானம் உம்முளே
இருந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரு உம்முளே.


சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல்
சோதிவந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடு
ஆதிசக் கரத்தினில் அமர்ந்துதீர்த்தம் ஆடுவன்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே.


திருவுமாகிச் சிவனுமாகித் தெளிந்துளோர்கள் சிந்தையில்
மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன்
கருவிலே விழுந்தெழுந்த கன்மவாதனை யெலாம்
பருதிமுன் இருளதாயப் பறியும் அங்கி பாருமே.


பாரும்எந்தை ஈசர்வைத்த பண்பிலே இருந்துநீர்
சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்துதேடி மாலயன்
பாரிடந்து விண்ணிலே பறந்துங்கண்டது இல்லையே.


கண்டிலாது அயன்மாலென்று காட்சியாகச் சொல்கிறீர்
மிண்டிலால் அரனுடன் மேவலாய் இருக்குமோ
தொண்டுமட்டும் அன்புடன் தொழுதுநோக்க வல்லிரேல்
பண்டுமுப் புரமெரித்த பக்திவந்து முற்றுமே.


முற்றுமே அவனொழிந்து முன்பின்ஒன்றும் காண்கிலேன்
பற்றிலாத ஒன்றுதன்னை பற்றுநிற்க வல்லது
கற்றதாலே ஈசர்பாதம் காணலா யிருக்குமோ
பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே.


கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலத்துளே
வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும்
வீட்டிலே வெளியதாகும் விளங்கவந்து நேரிடும்
கூட்டிவன்னி மாருதம் குயத்தைவிட்டு எழுப்புமே.


எழுப்பிமூல நாடியை இதப்படுத்த லாகுமே
மழுப்பிலாத சபையைநீர் வலித்துவாங்க வல்லிரேல்
கழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில்அப்புறம்
அழுத்திஓ ரெழுத்துளே அமைப்பதுண்மை ஐயனே.


அல்லதில்லை யென்று தானாவியும் பொருளுடல்
நல்லஈசர் தாளிணைக்கும் நாதனுக்கும் ஈந்திலை
என்றும்என்னுள் நேசமும் வாசியை வருந்தினால்
தொல்லையாம் வினைவிடென்று தூரதூரம் ஆனதே.


ஆனதே பதியது அற்றதே பசுபாசம்
போனதே மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ
ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே.


உலாவும்உவ்வும் மவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும்
உலாவிஐம் புலன்களும் ஒருதலத் திருந்திடும்
நிலாவும்அங்கு நேசமாகி நின்றமுர்தம் உண்டுதாம்
குலாவும்எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே.


கும்பிடும் கருத்துளே குகனைஐங் கரனையும்
நம்பியே இடம் வலம் நமஸ்கரித்து நாடிட
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவணைத்
தும்பிபோல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே.


நீங்கும்ஐம் புலன்களும் நிறைந்தவல் வினைகளும்
ஆங்காரமாம் ஆசையும் அருந்தடர்ந்த பாவமும்
ஓங்காரத்தி னுள்ளிருந்த வொன்பதொழிந் தொன்றிலத்
தூங்கவீசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே.


நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையே
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
நினைக்குள் நானெக்குள் நீ நினைக்குமாறது எங்ஙனே.


கருக்கலந்த காலமே கண்டுநின்ற காரணம்
உருக்கலந்த போதலோ உன்னை நானுணர்ந்தது
விரிக்கிலென் மறைக்கிலென் வினைக்கிசைந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ.


ஞானநூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள்
ஞானமான சோதியை நாடியுள் அறிகிலீர்
ஞானமாகி நின்றதோர் நாதனை அறிந்தபின்
ஞானமற்ற தில்லைவேறு நாமுரைத்தது உண்மையே.


கருத்தரிப்ப தற்குமுன் காயம்நின்றது எவ்விடம்
உருத்தரிப்ப தற்குமுன் உயிர்ப்புநின்றது எவ்விடம்
அருட்பொதிந்த சிந்தையில் மயக்கம்நின்றது எவ்விடம்
விருப்புணர்ந்த ஞானிகள் விரித்துரைக்க வேணுமே.


கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்
மறுவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின்
உருவினைப் பயன்இதென்று உணர்ந்தஞானி சொல்லுமே.


வாயில்எச்சில் போகவே நீர்குடித்து துப்புவீர்
வாயிருக்க எச்சில் போன வாறதென்னது எவ்விடம்
வாயிலெச்சில் அல்லவோ நீருரைத்த மந்திரம்
நாதனை அறிந்தபோது நாடும்எச்சில் ஏதுசொல்.


தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள்
தொடக்கிருந்த தெவ்விடம் சுத்தியானது எவ்விடம்
தொடக்கிருந்த வாறறிந்து சுத்திபண்ண வல்லிரேல்
தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்து காணலாகுமே.


மேதியோடும் ஆவுமே விரும்பியே உணர்ந்திடில்
சாதிபேத மாய்உருத் தரிக்குமாறு போலவே
வேதமோது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே.


வகைகுலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்
தொகைக்கு லங்களான நேர்மைநாடியே உணர்ந்தபின்
மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறுமொன்று கண்டிலீர்
நகைத்த நாதன் மன்றுள் நின்ற நந்தினியாரு பேசுமே.


ஓதும்நாலு வேதமும் உரைத்தசாஸ் திரங்களும்
பூததத் துவங்களும் பொருந்தும்ஆக மங்களும்
சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேத மாகியே பிறந்துழன் றிருந்ததே.


உறங்கிலென் விழிக்கிலென் உணர்வுசென்றொடுங் கிலென்
திறம்பிலென் திகைக்கிலென் சிலதிசைகள் எட்டிலென்
புறம்புமுள்ளும் எங்ஙணும் பொதிந் திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகள் நினைப்ப தேது மில்லையே.


அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்டபூசை செய்கிறீர்
அங்கலிங்கம் பூண்டுநீர் அமர்ந்திருந்த மார்பனே
எங்குமோடி எங்குமெங்கும் ஈடழிந்து மாய்குகிறீர்
செங்கல்செம்பு கல்லெலாம் சிறந்துபார்க்கு மூடரே.


திட்டம்தீட்டம் என்றுநீர் தினமுழுகு மூடரே
தீட்டமாகி அல்லவோ திரண்டுகாய மானது
பூட்டகாயம் உம்முளே புகழுகின்ற பேயரே
தீட்டுவந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே.


மூலநாடி தம்முளே முளைத்தெழுந்த வாயுவை
நாளுநாளு நம்முளே நடுவிருந்த வல்லிரேல்
பாலனாகும் உம்முடன் பறந்து போகலாய்விடும்
ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே.


உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி வாயமாம்
சந்திசந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே
முந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய்
அந்திசந்தி அற்றிட அறிந்துணர்ந்து பாருமே.


வன்னிமூன்று தீயினில் வாழுமெங்கள் நாதனும்
கன்னியான துள்ளிருக்கக் காதல் கொண்டது எவ்விடம்
சென்னிநாலு கையிரண்டு சிந்தையில் இரண்டிலொன்று
உன்னியுன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே.


தொண்டு செய்து நீங்களும் சூழவோடி மாள்கிறீர்
உண்டுழன்று நும்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுலாவு சோலைசூழ் வாழுமெங்கள் நாதனும்
பண்டுபோல நம்முளே பகுத்திருப்பன் ஈசனே.


அரியதோர் நமச்சிவாயம் அதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுகோடி அளவிடாத மந்திரம்
தெரியநாலு வேதம்ஆறு சாத்திர புராணமும்
தேடுமாறும் அயனுஞ்சர்வ தேவதேவ தேவனே.


பரமுனக்கு எனக்குவேறு பயமுமில்லை பாரையா
கரமுனக்கு நித்தமுங் குவித்திடக் கடமையாம்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே
உரமெனக்கு நீயளித்த உண்மையுண்மை உண்மையே.


மூலவட்ட மீதிலே முளைந்தஐந் தெழுத்திலே
கோலவட்டம் மூன்றுமாய்க் குளிர்ந்தலர்ந்து நின்ற தீ
ஞாலவட்ட மன்றுளே நவின்றஞானி மேலதாய்
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே.


என்னகத்தில் என்னை நானெங்கும் ஓடிநாடினேன்
என்னகத்தில் என்னையன்றி ஏதுமொன்று கண்டிலேன்
வின்னெழும்பி விண்ணகத்தின் மின்னொடுங்கு மாறுபோல்
என்னகத்துள் ஈசனோ டியானுமல்ல தில்லையே.


நாலுவேதம் ஓதுகின்ற ஞானமொன்று அறிவிரோ
நாலுசாமம் ஆகியும் நவின்றஞான போதமாய்
ஆலமுண்ட கண்டனும் அயனும் அந்தமாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சிலே தரித்ததேசி வாயமே.


முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய்
அச்சதுரம் உம்முளே அடங்கிவாசி யோகமாம்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரித்த மந்திரம் ஓம்நமசி வாயமே.


மூலமண்ட லத்துளே முச்சதுர மாயமாய்
நாலுவாசல் என்விரலில் உடுத்தித்த மந்திரம்
கோலியென்றும் ஐந்துமாய்க் குளிர்ந்தலந்து நின்றநீ
மேலுமேலு நாடினேன் விழைந்ததே சிவாயமே.


இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே
அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கஞானம் எவ்விடம்
அடங்குகின்றது எவ்விட மறிந்து பூசை செய்யுமே.


புத்தகங்க ளைச்சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்
செத்திடம் பிறந்திடம் தெங்ஙனென்றே அறிகிலீர்
அத்தனைய சித்தனை அறிந்துநோக்க வல்லிரேல்
உத்தமத்துள் ஆயசோதி உணரும் போக மாகுமே.


அருளிலே பிறந்துதித்து மானயரூப மாகியே
இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ
பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லிரேல்
மருள தேதுவன்னியின் மறைந்ததே சிவாயமே.


கருக்கலந்த காலமே கண்டிருந்த காரணா
உருக்கலந்த சோதியைத் தெளிந்து யானறிந்தபின்
தருக்கலந்த சோதியைத் தெளிந்துயா னறிந்தபின்
இருக்கிலேன் இறக்கிலேன் இரண்டுமற்று இருந்ததே.


தன்மசிந்தை யாமளவும் தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயிலுழன்று கருத்தமிழ்ந்த கசடரே
சென்மசென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை
நன்மையாக உம்முளே நயந்துகாண வேண்டுமே.


கள்ளவுள்ள மேயிருந்து கடந்தஞானம் ஓதுவீர்
கள்ளமுள் ளறுத்தபோது கதியிதன்றிக் காண்கிலீர்
உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லிரேல்
தெள்ளுஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே.


காணவேண்டு மென்று நீர் கடல்மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே
வேணுமென்றவ் வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்றசீவன் தான்சிவம தாகுமே.


அணுவினொடு அகண்டமாய் அளவிலாத சோதியைக்
குணம தாகஉம் முளே குறித்து நோக்கின் முத்தியாம்
மிணமிணென்று விரலையெண்ணி மீளொணாத மயக்கமாய்
துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர்.


எச்சிலெச்சில் என்றுநீரிடைந்திருக்கும் ஏழைகாள்
துச்சிலெச்சில் அல்லவோ தூயகாய மானதும்
வைத்தஎச்சில் தேனலோ வண்டினெச்சில் பூவலோ
கைச்சுதாவில் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே.


தீர்த்தலிங்க மூர்த்தியென்று தேடியோடுந் தீதரே
தீர்த்தலிங்கம் உள்ளினின்ற சீவனைத் தெளியுமே
தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண வல்லிரேல்
தீர்த்தலிங்கம் தானதாய்ச் சிறந்ததே சிவாயமே.


ஆடுகொண்டு கூடுசெய்து அமர்ந்திருக்கும் வாறுபோல்
தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே
போடுதர்ப்ப பூசையென்ன பூசையென்ன பூசையே.





Meta Information:
Sivavakiyam Couplet,சிவவாக்கியர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,sivavakkiyar padalgal in tamil lyrics,devotional songs,Poet Sivavakkiyar