பட்டினத்தார்
TAGS:
pattinathar Couplet, ,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil songs,pattinathar,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar



அருள் புலம்பல்

கங்குகரை இல்லாண்டி! கரைகாணாக் கப்பலடி!
எங்கும் அளவில்லாண்டி! ஏகமாய் நின்றாண்டி.


தீவகம்போல் என்னைச் சேர்ந்தபர சின்மயன் காண்;
பாவகம் ஒன்று இல்லாண்டி! பார்த்தஇடம் எல்லாம் பரன்காண்!


உள்ளார்க்கும் உள்ளாண்டி! ஊருமில்லான்! பேருமில்லான்!
கள்ளப்புலன் அறுக்கக் காரணமாய் வந்தாண்டி!


அப்பிறப்புக்கு எல்லாம் அருளாய் அமர்ந்தாண்டி!
இப்பிறப்பில் வந்தான் இவனாகும் மெய்ப்பொருள்காண்!


நீர் ஒளிபோல் எங்கும் நிறைந்த நிராமயன்காண்!
பார் ஒளிபோல் எங்கும் பரந்த பராபரன் காண்!


நூலால் உணர்வரிய நுண்மையினும் நுண்மையன்காண்!
பாலூறு சர்க்கரைபோல் பரந்தபரி பூரணன் காண்!


உளக்கண்ணுக்கு அல்லால் ஊன்கண்ணால் ஓருமதோ?
விளக்குச் சுடர் ஒளிபோல் மேவிஇருந்தாண்டி!


கல்லுள் இருந்த கனல் ஒளிபோல் காரணமாய்ப்
புல்லி இருந்தும் பொருவு அரிய பூரணன்காண்!


பொற்பூவும் வாசனைபோல் போதம் பிறந்தவர்க்குக்
கற்பூவும் வாசனை போல் காணாக் கயவருக்கு


மைக்குழம்பும் முத்தும்போல் மருவி, மறவாதவர்க்குக்
கைக்குள் கனியாகும் கரு அறுத்த காரணர்க்கு.


பளிங்கில் பவளமடி! பற்று அற்ற பாவலர்க்குக்
கிளிஞ்சிலை வெள்ளி என்பார் கிட்டாதார் கிட்டுவரோ?


ஏட்டுக்கு அடங்காண்டி! எழுத்தில் பிறவாண்டி!
நாட்டில் நரிகளெல்லாம் நல்புரவி செய்தாண்டி!


பஞ்சப் பிரளயத்து மிஞ்சி இருப்பாண்டி!
நஞ்சு பொதிமிட ற்றான் நயனத்து அழல்விழியான்.


அகம்காக்கும்; புறம்காக்கும்! அளவிலா அண்டமுதல்
செகம்காக்கும்; காணாத் திசைபத்தும் காக்குமடி!


பேசாப் பிரமமடி! பேச்சிறந்த பேரொளிகாண்!
ஆசா பாசங்கள் அணுகாத வேரொளிகாண்!


தேசம் இறந்தவன் காண்! திசை இறந்த தென் கடல்காண்!
ஊசி முனை இன்றி இல்லா உருபொருள்காண்!


சிப்பியில் முத்தொளிகாண்! சின்மய நோக்கு இல்லார்க்கு
அப்பில் ஒளிபோல் அமர்ந்த அரும்பொருள்காண்!


ஆல விருட்சமடி! அளவிலாச் சாகையடி!
மேலாம் பதங்கள் விசும்புஊடுருவும் மெய்ப்பொருள்காண்!


வங்கிஷம் எல்லாம் கடந்து மருவா மலர்ப்பதம்காண்!
அங்கிஷமாய் எங்கும் ஆழ்ந்த அரும்பொருள்காண்!


நாமநட்டம் ஆனதடி! நவில இடம் இல்லையடி!
காமனைக் கண்ணால் எரிக்கக் கனல் விழித்த காரணன் காண்!


கொட்டாத சொம்பொனடி! குளியாத் தரளமடி!
எட்டாத கொம்பிலடி ஈப்புகாத் தேனமுதம்.


காணிப்பொன் னாணியுடன் கல்லுரைமாற்று இன்னதென்றே
ஆணியுடன் கூட்டி அடங்கலிட்டுக் கொண்டாண்டி!


அளவிறந்த அண்டத்தார் அத்தனைபேர் உண்டாலும்
பிளவளவும் தான்சற்றும் பேசாப் பிரமமடி!


கல்நெஞ்சின் உள்ளே கழுநீலம் பூத்தாற்போல்
என்நெஞ்சின் உள்ளே இணை அடிகள் வைத்தாண்டி!


வேதப் புரவியடி! விரைந்தோடியும் அறியார்;
காதற்ற ஞானமடி! காண்பார் கருத்துடையோன்.


பாச வினையைப் படப்பார்த்த பார்வையுடன்
நேசத்தைக் காட்டி நில் என்று சொன்னாண்டி!


ஓசை ஒடுங்கும் இடம் ஓங்காரத்து உள் ஒளிகாண்!
பேசாது இருக்கும் பிரமம் இது என்றாண்டி!


சின்மய நல்நோக்கால் சிற்சொரூபம் காட்டிஎனைத்
தன் மயமாய் ஆக்கியே தான் அவனாய் நின்றாண்டி!


தான் என்னைப் பார்த்தாண்டி! தன்னைத்தான் அல்லாமல்
நான் என்ன சொல்லுவண்டி! நவில இடம் இல்லையடி!


இன்றிருந்து நாளைக்கு இறக்கிறபேர் எல்லாரும்
என்றும் பரிபூரணத்தில் இனிது இருக்கச் சொன்னாண்டி!


பார்க்கில் எளிது அலவோ? பற்றற்ற பற்று அலவோ?
ஆர்க்கும் இடம் காட்ட அவனிதனில் வந்தாண்டி!


இத்தனை காலமடி இறந்து பிறந்த தெல்லாம்
இத்தனையும் இல்லையடி இரும்பில்உறை நீரானேன்.


எக்காலம் பட்டதடி! இறந்து பிறந்ததெல்லாம்
அக்காலம் எல்லாம் அழுந்தினேன் நான் நரகில்.


காலம் கழிந்ததடி! கர்மம் எல்லாம் போச்சுதடி!
நாலு வகைக்கருவும் நாமநட்டம் ஆச்சுதடி!


முப்பாழுக்கு அப்பால் முதற்பாழ் முழு முதலாய்
இப்போது வந்தான் காண்! எனை விழுங்கிக் கொண்டான்காண்.


பாலின்கண் நெய் இருந்தாற் போலப் பரஞ்சோதி
ஆலிங்கனம் செய்து அறவிழுங்கிக் கொண்டாண்டி!


செத்தபடம் ஆனேண்டி! தீ இரும்பில் நீரானேன்;
ஒத்தவிடம் நித்திரை என்று ஓதும் உணர்வறிந்தேன்.


ஒப்பும் உவமையும் அற்ற ஓத அரிதாய பொருள்
இப்புவி யில்குருவே என்னவந்தோன் தாள் வாழி.


ஒப்பாரி சொல்லிடினும் உவமை பிழைத்திடினும்
முப்பாழும் கற்றுணர்ந்தோர் முன்னோர் பொறுத்தருள்வார்.


இறந்த காலத்து இரங்கல்

வார்த்தைத் திறமில்லா மனிதருக்குப் புன் சொல்லாம்
சாத்திரங்கள் சொல்லிச் சதுர் இழந்து கெட்டேனே.


மெத்த மெத்தச் செல்வாக்கில் வேறு மருள் எடுத்துத்
தத்தித் தலை கீழாய்த் தான் நடந்து கெட்டேனே;


வழக்கத் தலங்களினும் மண் பெண் பொன் ஆசையினும்
பழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே.


ஆணி பொருந்தும் அரும்பூமி அத்தனையும்
காணில் நமது என்று கனம் பேசிக் கெட்டேனே.


ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிப்
பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே.


குருமார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே.


ஆலம் அருந்தும் அரன்பெருமை எண்ணாமல்
பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே.


பிணவாசம் உற்ற பெரும்காயம் மெய்யென்று
பண ஆசையாலே பதி இழந்து கெட்டேனே.


கண்ட புலவர் கனக்கவே தான் புகழ
உண்ட உடம்பெல்லாம் உப்பரித்துக் கெட்டேனே.


எண்ணிறந்த சென்மம் எடுத்துச் சிவபூசை
பண்ணிப் பிழையாமல் பதி இழந்து கெட்டேனே.


சிற்றெறும்பு சற்றும் தீண்டப் பொறாஉடம்பை
உற்றுருக்கவும் சுடவும் ஒப்பித்து மாண்டேனே.





Meta Information:
pattinathar Couplet,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar