பட்டினத்தார்
TAGS:
pattinathar Couplet, ,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil songs,pattinathar,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar



அருள் புலம்பல்

கங்குல்பகல் அற்றிடத்தைக் காட்டிக் கொடுத்தாண்டி!
பங்கம் அழித்தாண்டி! பார்த்தானைப் பார்த்திருந்தேன்.


சாதியில் கூட்டுவரோ? சாத்திரத்துக்கு உள்ளாமோ?
ஓதிஉணர்ந்ததெல்லாம் உள்ளபடி ஆச்சுதடி!


என்ன குற்றம் செய்தேனோ எல்லாரும் காணாமல்,
அன்னை சுற்றம் எல்லாம் அறியாரோ அம்புவியில்?


கொன்றாரைத் தின்றேனோ? தின்றாரைக் கொன்றேனோ?
எண்ணாத எல்லாம் எண்ணும் இச்சை மறந்தேனோ?


சாதியில் கூட்டுவரோ? சமயத்தோர் எண்ணுவரோ?
பேதித்து வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி?


கண்டார்க்குப் பெண்ணலவோ? காணார்க்கும் காமமடி!
உண்டார்கள் உண்டதெலாம் ஊணல்ல துண்டர்களோ?


கொண்டவர்கள் கொண்டதெல்லாம் கொள்ளாதார் கொள்ளுவரோ?
விண்டவர்கள் கண்டவரோ? கண்டவர்கள் விண்டவரோ?


பண்டாய நான்மறைகள் பாடும் பரிசலவோ?
தொண்டாய தொண்டர்உளம் தோற்றி ஒடுங்குமதோ.


ஓத எளிதோ? ஒருவர் உணர்வரிதோ?
பேதம்அற எங்கும் விளங்கும் பெருமையன்காண்.


வாக்கும் மனமும் கடந்த மனோலயன் காண்!
நோக்க அரியவன் காண்; நுண்ணியரில் நுண்ணியன் காண்!


சொல்லுக்கு அடங்கான் காண்! சொல்லிறந்து நின்றவன் காண்!
கல்லுள் இருந்த கனல்ஒளிபோல் நின்றவன் காண்!


சுட்டிறந்த பாழ் அதனில் சுகித்திருக்கச் சொன்னவன் காண்!
ஏட்டில் எழுத்தோ? எழுதினவன் கைப்பிழையோ?


சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்;
அம்மா! பொருள் இதுஎன அடைய விழுங்கினண்டி!


பார்த்த இடம் எல்லாம் பரமாகக் கண்டேண்டி!
கோத்த நிலைகுலைத்த கொள்கை அறியேண்டி!


மஞ்சனம் ஆட்டி மலர்பறித்துச் சாத்தாமல்
நெஞ்சு வெறும் பாழானேன் நின்றநிலை காணேண்டி!


பாடிப் படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல்;
ஓடித் திரியாமல் உருக்கெட்டு விட்டேண்டி!


மாணிக்கத் துள்ஒளிபோல் மருவி இருந்தாண்டி!
பேணித் தொழும் அடியார் பேசாப் பெருமையன் காண்!


அன்றுமுதல் இன்றளவும் அறியாப் பருவமதில்
என்றும் பொதுவாய் இருந்த நிராமயன் காண்!


சித்த விகாரத்தால் சின்மயனைக் காணாமல்
புத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே.


பத்தி அறியாமல் பாழில் கவிழ்ந்தேண்டி!
ஒத்தஇடம் நித்திரை என்று ஒத்தும் இருந்தேண்டி!


செத்தாரை ஒத்தேண்டி! சிந்தை தெளிந்தேண்டி!
மற்றாரும் இல்லையடி! மறுமாற்றம் காணேண்டி!


கல்வியல்ல; கேள்வியல்ல; கைநாட்டும் காரணம்காண்
எல்லையள வற்றதடி! எங்கும் நிறைந்ததடி!


வாசா மகோசரத்தை மருவிஇடம் கொண்டாண்டி;
ஆசூசம் இல்லாண்டி! அறிவுக்கு அறிவாண்டி!


பத்துத் திசைக்கும் அடங்காப் பருவமடி!
எத்திசைக்கும் எங்கும் இடைவிடாத ஏகமடி!


தித்திக்க ஊறுமடி! சித்தம் உடையார்க்குப்
பத்திக் கடலுள் பதித்தபரஞ் சோதியடி!


உள்ளுணர்வாய் நின்றவர்தம் உணர்வுக்கு உணர்வாண்டி!
எள்ளளவும் உள்ளத்தில் ஏறிக் குறையாண்டி!


தூரும் தலையும் இலான்; தோற்றம் ஒடுக்கம் இலான்
ஆரும் அறியாமல் அகண்டமாய் நின்றாண்டி!


எத்தனையோ அண்டத்து இருந்தவர்கள் எத்தனை பேர்
அத்தனைபேர் உண்டாலும் அணுவும் குறையாண்டி!


வாக்கும் மனமும் வடிவும் இலா வான் பொருள் காண்!
போக்கும் வரவும் இலான்; பொருவரிய பூரணன் காண்!


காட்சிக்கு எளியான் காண்! கண்டாலும் காணான்காண்!
மாட்சி மனம் வைத்தார்க்கு மாணிக்கத் துள்ஒளிகாண்!


வாழ்த்தி அவனை வழிபட்டால் மன்னுயிர்கள்
தோற்றம் அறியான் காண்! சொல் இறந்த சோதியன் காண்!


ஐயம் அறுத்தவனை ஆராய்வார் உண்டானால்
வையகத்தே வந்து மலர்ப்பாதம் வைத்திடுவான்.


அணுவுக்கும் மேருவுக்கும் அகம்புறமாய் நின்றான் காண்!
கணுமுற்றும் ஞானக் கரும்பின் தெளிவான் காண்!


எந்நாளும் இந்நாளும் இப்படியாய் அப்படியாய்ச்
சொன்னாலும் கேளான் காண்! தோத்திரத்தில் கொள்ளான் காண்!


ஆத்தாளுக்கு ஆத்தாளாம்; அப்பனுக்கும் அப்பனுமாம்;
கோத்தார்க்குக் கோத்தநிலை கொண்ட குணக்கடல்காண்;


இப்போ புதிதோடி! எத்தனை நாள் உள்ளதடி!
அப்போதைக்கு அப்போது அருளறிவும் தந்தாண்டி!


பற்றற்றார் பற்றாகப் பற்றி இருந்தாண்டி!
குற்றம் அறுத்தாண்டி! கூடி இருந்தாண்டி!


வெட்ட வெளியில் எனைமேவி இருந்தாண்டி!
பட்டப் பகலிலடி பார்த்திருந்தார் எல்லோரும்.


வாழ்வான வாழ்வெனக்கு வந்ததடி வாழாமல்
தாழாமல் தாழ்ந்தேண்டி! சற்றும் குறையாமல்.


பொய்யான வாழ்வு எனக்குப் போதுமெனக் காணேண்டி!
மெய்யான வாழ்வு எனக்கு வெறும் பாழாய் விட்டதடி!


கன்னி அழித்தவனைக் கண்ணாரக் கண்டேண்டி!
என்இயல்பு நான் அறியேன்; ஈதென்ன மாயமடி!


சொல்லாலே சொல்லுதற்குச் சொல்லவாய் இல்லையடி!
எல்லாரும் கண்டிருந்தும் இப்போது அறியார்கள்!


கண்மாயம் இட்டாண்டி! கருத்தும் இழந்தேண்டி!
உள்மாயம் இட்டவனை உரு அழியக் கண்டேண்டி!


என்ன சொல்லப் போறேன் நான் இந்த அதிசயத்தைக்
கன்னி இளங்கமுகு காய்த்ததடி கண்ணார.


ஆர்ந்த இடம் அத்தனையும் அருளாய் இருக்குமடி!
சார்ந்த இடம் எல்லாம் சவ்வாது மணக்குதடி!


இந்தமணம் எங்கும் இயற்கை மணம் என்றறிந்து
அந்தசுகா தீதத்து அரும்கடலில் மூழ்கினண்டி!


இரும்பின் உறை நீர்போல் எனைவி ழுங்கிக் கொண்டாண்டி!
அரும்பில்உறை வாசனை போல் அன்றே இருந்தாண்டி!


அக்கினிகற் பூரத்தை அற விழுங்கிக் கொண்டாற்போல்
மக்கினம் பட்டுள்ளே மருவி இருந்தாண்டி!


கடல்நீரும் ஆறும்போல் கலந்துகரை காணேண்டி!
உடலும் உயிரும் போல் உள்கலந்து நின்றாண்டி!


பொன்னும் உரை மாற்றும்போல் பொருவு அரிய பூரணன்காண்
மன்னுமனு பூதியடி மாணிக்கத் துள்ஒளிபோல்.





Meta Information:
pattinathar Couplet,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar