பட்டினத்தார்
TAGS:
pattinathar Couplet, ,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil songs,pattinathar,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar



பொது

அண்ணல்தன் வீதி அரசிருப் பாகும் அணி படையோர்
நண்ணொரு நாலொன்பதாம் அவர் ஏவலும் நண்ணும்இவ்வூர்
துண்ணென் பசிக்கு மடைப்பள்ளியான் சுகமுமெல்லாம்
எண்ணிலி காலம் அவமே விடுத்தனம் எண்ணரிதே !


என்பெற்ற தாயாரும் என்னைப் ‘பிண’ மென்று இகழ்ந்து விட்டார்;
பொன்பெற்ற மாதரும் ‘போ’ மென்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்;
உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே!


கரையற்ற பல்லும் கரித்துணி ஆடையும் கள்ளமின்றிப்
பொறை யுற்ற நெஞ்சமும் பொல்லாத ஊணும் புறந்திண்ணையும்
தரையில் கிடப்பும் இரந்துண்ணும் ஓடும் சகமறியக்
குறைவற்ற செல்வமென் றேகோல மாமறை கூப்பிடுமே.


எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூட ரெல்லாம்
கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர், கருத்தில் வையார்
பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே.


வாய்நாறும் ஊழல் மயிர்ச்சிக்கு நாறிடும் மையிடுங்கண்
பீ நாறும் அங்கம் பிணவெடி நாறும் பெருங்குழி வாய்ச்
சீ நாறும் யோனி அழல்நாறும் இந்திரியப் பேறு சிந்திப்
பாய்நாறும் மங்கையர்க் கோஇங்ஙனே மனம் பற்றியதே?


உரைக்கைக்கு நல்ல திருவெழுத்து ஐந்துண்டு உரைப்படியே
செருக்கித் தரிக்கத் திருநீறு முண்டு தெருக்குப்பையில்
தரிக்கக் கரித்துணி ஆடையும் உண்டு எந்தச் சாதியிலும்
இரக்கத் துணிந்துகொண்டேன் குறை ஏதும் எனக்கில்லையே


ஏதப்பட்டாய் இனி மேற்படும் பாட்டைஇ தென்றறிந்து
போதப்பட்டாயில்லை நல்லோரிடம் சென்று புல் லறிவால்
வாதைப்பட்டாய் மட மானார் கலவி மயக்கத்திலே
பேதப்பட்டாய் நெஞ்சமே உனைப்போல் இல்லை பித்தருமே !


சுரப்பற்று வல்வினை சுற்றமும் அற்றுத் தொழில்களற்று
கரப்பற்று மங்கையர் கையிணக் கற்றுக் கவலையற்று
வரப்பற்று நாதனை வாயார வாழ்த்தி மன மடங்கப்
பரப்பற்றி ருப்பதன் றோ? பர மா ! பரமானந்தமே !


பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கை யரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்
சேய்போல் இருப்பர்கண் டீர்உண்மை ஞானம் தெளிந்தவரே !


விடக்கே பருந்தின் விருந்தே கமண்டல வீண னிட்ட
முடக்கே புழுவந்து உறையிடமே நலம் முற்றும் இலாச்
சடக்கே கருவி தளர்ந்துவிட்டார் பெற்ற தாயுந்தொடாத்
தொடக்கே உனைச்சுமந் தேன் நின்னின் ஏது சுகமெனக்கே?


அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் சுடவுரைத்த
பழுதால் பயனென்ன? நன்மையும் தீமையும் பங்கயத் தோன்
எழுதாப்படி வருமோ? சலியாதுஇரு என்ஏழை நெஞ்சே !


செல்வரைப் பின்சென் றுபசாரம் பேசித் தினந்தினமும்
பல்லினைக் காட்டி பரிதவி யாமல் பரமா னந்தத்தின்
எல்லையில் புக்குநல் ஏகாந்த மாய் எனக் காமிடத்தே
அல்லல் அற்றுஎன்றிருப் பேன் ஆலநீழல் அரும் பொருளே !


ஊரீர் உமக்கோர் உபதேசம் கேளும் உடம் படங்கப்
போரீர் சமனைக் கழுவேற்று நீற்றைப் புறந்திண்ணையில்
சாரீர் அனந்தலைச் சுற்றத்தை நீங்கிச் சகம்நகைக்க
ஏரீர் உமக்கு அவர் தாமே தருவர் இணையடியே !


நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? நீ மனமே
மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல்
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?
ஆற்றில் கிடந்தும் துறையறி யாமல் அலைகின்றையே !


ஓங்கார மாய்நின்ற வத்துவி லேஒரு வித்துவந்து
பாங்காய் முளைத்த பயன் அறிந்தால் பதி னாலுலகும்
நீங்காமல் நீங்கி நிறையாய் நிறைந்து நிறையுருவாய்
ஆங்கார மானவர்க் கெட்டாக் கனிவந் தமர்ந்திடுமே.


விதியார் படைப்பும் அரியார் அளிப்பும் வியன் கயிலைப்
பதியார் துடைப்பும் நம் பால் அணுகாது பரமானந்தமே
கதியாகக் கொண்டுமற் றெல்லாம் துயிலில் கனவென நீ
மதியா திருமன மே இது காண் நல் மருந்துனக்கே !


நாய்க்குண்டு தெண்டு நமக்குண்டு பிச்சை நமனைவெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட் சரம் மதி யாமல்வரும்
பேய்க்குண்டு நீறு திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன் அருள் நோக்கங்கள் நோக்குதற்கே !


நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆக நீதிநெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்த்ர யோகநிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே.


நான் எத்தனை புத்தி சொன்னாலும் கேட்கிலை நன்னெஞ்சமே
ஏன் இப்படிகெட் டுழலுகின்றாய்? இனி ஏதுமில்லா
வானத்தின் மீனுக்கு வன் தூண்டில் இட்ட வகையதுபோல்
போனத்தை மீள நினைக்கின்றனை என்ன புத்தியிதே !


அஞ்சக் கரமெனுங் கோடாலி கொண்டிந்த ஐம்புலனாம்
வஞ்சப் புலக்கட்டை வேர் அறவெட்டி வளங்கள் செய்து
விஞ்சத் திருத்திச் சதாசிவம் என்கின்ற வித்தையிட்டுப்
புன்செக் களை பறித்தேன் வளர்த்தேன் சிவ போகத்தையே !


தாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள்
“நீயாரு ? நானார்?” எனப்பகர் வார் அந்த நேரத்திலே
நோயாரும் வந்து குடிகொள்வரே கொண்ட நோயும் ஒரு
பாயாரும் நீயுமல்லால் பின்னையேது நட் பாமுடலே


ஆயும் பொழுது மயிர்க்கால்கள் தோறும் அரும் கிருமி
நோயும் மலக்குட்டையாகிய காயத்தைச் சுட்டுவிட்டால்
பேயும் நடனம் இடும் கடமாம் என்று பேசுவதை
நீயும் அறிந்திலையோ? பொருள் தேட நினைந்தனையே


பூணும் பணிக்கல்ல பொன்னுக்குத் தானல்ல பூமிதனைக்
காணும் படிக்கல்ல மங்கையர்க்கல்ல நற் காட்சிக்கல்ல
சேணுங் கடந்த சிவனடிக் கல்ல என் சிந்தை கெட்டுச்
சாணும் வளர்க்க அடியேன் படுந்துயர் சற்றல்லவே !


வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு
எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே?


எரு முட்டை பிட்கில் உதிர்ந்திடும் செல்லுக்கு எவர் அழுவார்?
கருமுட்டை புக்குக் கழலகன் றீர்கன துக்கமதாய்ப்
பெருமுட்டுப் பட்டவர் போல் அழும் பேதையீர் பேத்துகிறீர்
ஒரு முட்டும் வீட்டும் அரன் நாமம் என்றைக்கும் ஓதுமினே !


மையாடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனையும் செந்தீ
ஐயா நின்மாயை உருவெளித் தோற்றம் அகிலத்துள்ளே
மெய்யாயிருந்தது நாட்செல நாட்செல வெட்டவெறும்
பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே !


ஆயாய் பலகலை ஆய்ந்திடும் தூய அருந்தவர்பால்
போயாகிலும் உண்மையைத் தெரிந்தாயில்லை பூதலத்தில்
வேயார்ந்த தோளியர் காமவிகாரத்தில் வீழ்ந்தழுந்திப்
பேயாகி விழிக்கின்றனை மனமே என்ன பித்துனக்கே?


அடியார் உறவும் அரன் பூசை நேசமும் அன்புமன்றிப்
படி மீதில் வேறு பயனுளதோ? பங்கயன் வகுத்த
குடியான சுற்றமும் தாரமும் வாழ்வும் குயக்கலங்கள்
தடியால் அடியுண்ட வாறொக்கும் என்றினஞ் சார்ந்திலரே.


ஆங்காரப் பொக்கிசம் கோபக் களஞ்சியம் ஆணவத்தால்
நீங்கா அரண்மனை பொய்வைத்த கூடம் வீண் நீடிவளர்
தேங்கார் பெருமதில் காமவிலாசம் இத்தேகம் கந்தல்
பாங்காய் உனைப்பணிந்து எப்படி ஞானம் பலிப்பதுவே?


ஒழியாப் பிறவி எடுத்து ஏங்கி ஏங்கி உழன்ற நெஞ்சே
அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி அநாதியனை
மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்தில் உன்னி
விழியால் புனல் சிந்தி விம்மியழு நன்மை வேண்டுமென்றே !


நாய்க்கொரு சூலும் அதற்கோர் மருத்துவம் நாட்டில் உண்டோ?
பேய்க்கொரு ஞானம் பிடிபடுமோ? பெரும் காஞ்சிரங்காய்
ஆக்குவர் ஆர்? அருந்துவர் ஆர்? அதுபோல் உடம்பு
தீக்கிரை யாவதல்லால் ஏதுக்கு ஆம்? இதைச் செப்புமினே !


கச்சில் கிடக்கும் கனதனத்தில் கடைக் கண்கள் பட்டே
இச்சித் திருக்கின்ற ஏழை நெஞ்சே இமவான் பயந்த
பச்சைப் பசுங்கொடி உண்ணா முலை பங்கர் பாதத்திலே
தைச்சுக் கிடமனமே ஒரு காலும் தவறில்லையே.


மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவும்
கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை
போனாலும் பேறு இருந்தாலும் நற்பேறிது பொய் யன்றுகாண்
ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே !


சற்றாகிலும் தன்னைத் தானறியாய் தனை ஆய்ந்தவரை
உற்றாகிலும் உரைக்கப் பொருந்தாய் உனக்கான நிலை
பற்றாய் குருவைப் பணியாய் பரத்தையர் பாலில் சென்று என்
பெற்றாய்? மடநெஞ்சமே? உனைப் போல் இல்லை பித்தனுமே


உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே
ஒளியிட்ட தாள் இரண்டுள்ளே இருத்துவதுள் இண்மையென்று
வெளியிட்டு அடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலனே !


கல்லால் எறியுண்டும் காலால் உதையுண்டும் காளைகையில்
வில்லால் அடியுண்டு முன்னால் விடமுண்டு மேலளித்துப்
பல்லால் புரமெரிஏ கம்பவாணர் பாதாம்புயத்தின்
சொல்லால் செவியினில் கேளாதிருந்ததென தொல்வினையே.


ஒரு நான்குசாதிக்கு மூவகைத் தேவர்க்கும் உம்பருக்கும்
திருநாளும் தீர்த்தமும் வேறுளதோவத் திசை முகனால்
வருநாளில் வந்திடும் அந்தக் கண்ணாளன் வகுப்பொழியக்
குருநாதனாணைக் கண்டீர் பின்னைஏதுக் குவலயத்தே?


பாரோ நீரோ தீயோ வளியோ படர்வானோ
ஆரோ நானென்று ஆய்வுறுகின்றேன் அறிவில்லேன்
பாரோ நீரோ தீயோ வெளியோ படர்வானோ
ஆரோ நானென்று ஆய்வுறுகின்றஅது நீயே !


நாப்பிளக்கப் பொய்உரைத்து நன்னிதியந் தேடி
நாம்ஒன்றும் அறியாத நறியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்தொளையிற்கால் நுழைத்துக்கொண்டே
ஆப்புஅதனை அசைத்துவிட்ட குரங்கனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.


மத்தளை தயிர்உண் டானும் மலர்மிசை மன்னி னானும்
நித்தமும் தேடிக் காரை நிமலனே நீஇன் றேகிச்
செய்த்தளைக் கயல்பாய் நாங்கூர் சேந்தனை வேந்தனிட்ட
சைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டு ளானே.


தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி ?


முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன் ?


வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன் ?


நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீமூட்டுவேன் ?


அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு ?


அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்
மகனே” என அழைத்த வாய்க்கு ?


முன்னை இட்ட தீ முப்பு ரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவ யிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே [ கலிவிருத்தம் ]


வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை [ நேரிசை வெண்பா ]


வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய் ?


வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் - பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்





Meta Information:
pattinathar Couplet,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar