முத்தி தரும்வேத மொழியாம் புலம்பல்சொல்ல
அத்தி முகவன் தன் அருள்பெறுவதெக் காலம்.
ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமற் றூங்கி சுகம் பெறுவ தெக்காலம்.
நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே யிருந்து
தேங்காக்கருணை வெள்ளந் தேக்குவது மெக்காலம்.
தேங்காக் கருணைவெள்ளந் தேக்கியிருந் துண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்தடுப்ப தெக்காலம்.
ஓயாக் கவலையினா லுள்ளுடைந்து வாடாமல்
மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம்.
மாயாப் பிறவி மயக்கத்தை யூடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக்கொள்வ தெக்காலம்.
காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு
மாயா அனுபூதி வந்தடுப்ப தெக்காலம்.
சேயாச் சமைந்து செவிடூமை போற்றிரிந்து
பேய்போ லிருந்துன் பிரமை கொள்வ தெக்காலம்.
பேய்போற் றிரிந்து பிணம் போற்கிடந்து பெண்ணைத்
தாய்போ னினைத்துத் தவமுடிப்ப தெக்காலம்.
கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகங்காட்டி
மால்காட்டும் மங்கையரை மறந்திருப்ப தெக்காலம்.
பெண்ணினல்லா ராசைப் பிரமையினை விட்டொழிந்து
கண்ணிரண்டு மூடிக் கலந்திருப்ப தெக்காலம்.
வெட்டுண்ட புண்போல் விரிந்தவல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவு மெக்காலம்.
ஆறாத புண்ணி லழுந்திக் கிடவாமற்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவது மெக்காலம்.
தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனிற் கண்டு திருக்கறுப் தெக்காலம்.
மன்னுயிரைக் கொன்று வதைத்துண்டு ழலாமல்
தன்னுயிர்போலெண்ணித் தவமுடிப்ப தெக்காலம்.
பாவியென்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்
ஆவியென்ற சூத்திரத்தை யறிவதினி யெக்காலம்.
உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவ தெக்காலம்.
வேடிக்கையுஞ் சொகுசும் மெய்ப்பக்கட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை யெல்லாம் மறந்திருப்ப தெக்காலம்.
பட்டுடையும் பொற்பணியும் பாவனையுந் தீவினையும்
விட்டுவிட்டுன் பாதம் விரும்புவது மெக்காலம்.
ஆமை வருமாட்கண் டைந்தடக்கஞ் செய்தாற்போல்
ஊமை யுருக்கொண் டொடுங்குவது மெக்காலம்.
தண்டிகையுஞ் சாவடியுஞ் சாளிகையு மாளிகையுங்
கண்டு களிக்குங் கருத்தொழிவ தெக்காலம்.
அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்துநிதஞ்
செத்த சவம்போற் றிரிவதினி யெக்காலம்.
ஒழிந்தகருத் தினைவைத் துள்ளெழும்புவெள் ளெலும்பாய்க்
கழிந்தபிணம் போலிருந்து காண்பதினி யெக்காலம்.
அற்ப சுகமறந்தே அறிவையறி வாலறிந்து
கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோளறுப்ப தெக்காலம்.
கருப்படுத்தி என்னையமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி யாள உடன்படுவ தெக்காலம்.
தூண்டு விளக்கணையத் தொடர்ந்திருள் முன்சூழ்ந்தாற்போல்
மாண்டு பிழைத்துவந்த வகைதெரிவ தெக்காலம்.
தூரியினில் மீன்போற் சுழன்று மனம்வாடாமல்
ஆரியனைத் தேடி அடிபணிவ தெக்காலம்.
எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத வீடுபெற
வெண்ணீறு பூசி விளங்குவது மெக்காலம்.
அவவேடம் பூண்டிங் கலைந்து திரியாமற்
சிவவேடம் பூண்டு சிறந்திருப்ப தெக்காலம்.
அண்டருக்கா நஞ்சருந்தி அம்பலத்தி லாடுசிவன்
தொண்டருக்குத் தொண்டனென தொண்டுசெய்வ தெக்காலம்.
பன்றி வடிவெடுத்துப் பாரிடந்து மால்காணாக்
குன்றில் விளக்கொளியைக் கூறுவது மெக்காலம்.
தித்திக்குந் தெள்ளமிர்தை சித்தாந்தத் துட்பொருளை
முத்திக்கு வித்தை முதனினைப்ப தெக்காலம்.
வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே நிஷ்டையிலே
ஏகாந்தமாக யிருப்பதினி யெக்காலம்.
மற்றிடத்தைத் தேடியென்றன் வாழ்நாளைப் போக்காமல்
உற்றிடத்தைத் தேடி யுறங்குவது மெக்காலம்.
இன்றுளோர் நாளை யிருப்பதுவும் பொய்யெனவே
மன்றுளோர் சொல்லும் வகையறிவ தெக்காலம்.
கஞ்சா அபினியுடன் கள்ளுண்டே வாடாமற்
பஞ்சாமிர்தத்தைப் பருகுவது மெக்காலம்.
செஞ்சலத்தி னாற்றிரண்ட ஜெனனமோக்ஷம் பெறவே
சஞ்சலத்தை விட்டுன் சரணடைவ தெக்காலம்.
கும்பிக் கிரைத்தேடிக் கொடுப்பா ரிடந்தோறும்
வெம்பித் திரிகை விடுப்பதினி யெக்காலம்.
ஆடுகின்ற சூத்திரந்தான் அறுமளவுமே திரிந்து
போடுன்றநாள்வருமுன் போற்றுவது மெக்காலம்.
நவசூத் திரவீட்டை நானென் றலையாமல்
சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவ தெக்காலம்.
மறந்து மலசலங்கள் மாய்ப்புழுக் கூட்டைவிட்டுக்
கரந்துன் அடியினைக் கீழ்க் கலந்துநிற்ப தெக்காலம்.
இம்மை தனிற்பாதகனாய் இருவினைக்கீ டாயெடுத்த
பொம்மை தனைப்போட்டுன்னைப் போற்றி நிற்ப தெக்காலம்.
உப்பிட்ட பாண்டம் உடைந்துகருக் கொள்ளுமுன்னே
அப்பிட்ட வேணியனுக் காட்படுவ தெக்காலம்.
சேவைபுரிந்து சிவரூப காட்சி கண்டு
பாதைதனைக் கழித்துப் பயனடைவ தெக்காலம்.
காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டதுபோல்
பாண்டத்தை நீக்கிப் பரமடைவ தெக்காலம்.
சோற்றுத் துருத்திதனைச் சுமந்தலைந்து வாடாமல்
ஊத்தைச் சடம்போட் டுனையடைவ தெக்காலம்.
தொடக்கைச் சதமெனவே சுமந்தலைந்து வாடாமல்
உடக்கைக் கழற்றி உனையறிவ தெக்காலம்.
ஆசைவலைப்பாசத் தகப்பட்டு மாயாமல்
ஓசைமணி தீபத்தி லொன்றி நிற்ப தெக்காலம்.
கூறறிய நால்வேதங் கூப்பிட்டுங் காணாத
பார ரகசியத்தைப் பார்த்திருப்ப தெக்காலம்.
புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பி னிருளகல்வ தெக்காலம்.
kudambai Couplet,பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,padrakiriyaar padalgal in tamil lyrics,devotional songs,Poet padrakiriyaar siddhar