மனம்தெய்வம் என்று மகிழ்ந்து கொண்டாடிய
இனமதி ஈனமடி குதம்பாய்
இனமதி ஈனமடி.
பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள்
கற்பனை ஆகுமடி குதம்பாய்
கற்பனை ஆகுமடி.
நீண்ட குரங்கை நெடிய பருந்தினை
வேண்டப் பயன்வருமோ? குதம்பாய்
வேண்டப் பயன்வருமோ?
மெய்த்தேவன் ஒன்றென்று வேண்டாத பன்மதம்
பொய்த்தேவைப் போற்றுமடி குதம்பாய்
பொய்த்தேவைப் போற்றுமடி.
நாற்பத்து முக்கோணம் நாடும் எழுத்தெலாம்
மேற்பற்றிக் கண்டறி நீ குதம்பாய்
மேற்பற்றிக் கண்டறி நீ.
சட்கோணத்து உள்ளந்தச் சண்முக அக்கரம்
உட்கோணத்து உள்ளறி நீ குதம்பாய்
உட்கோணத்து உள்ளறி நீ.
ஐந்தெழுத்து ஐந்தறைக் கார்ந்திடும் அவ்வாறே
சிந்தையுள் கண்டறி நீ குதம்பாய்
சிந்தையுள் கண்டறி நீ.
ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில்
வீறான முப்பாமடி குதம்பாய்
வீறான முப்பாமடி.
விந்தொடு நாதம் விளங்கத் துலங்கினால்
வந்தது வாதமடி குதம்பாய்
வந்தது வாதமடி.
அப்பினைக் கொண்டந்த உப்பினைக் கட்டினால்
முப்பூ ஆகுமடி குதம்பாய்
முப்பூ ஆகுமடி.
உள்ளக் கருவியே உண்மை வாதம் அன்றிக்
கொள்ளக் கிடையாதடி குதம்பாய்
கொள்ளக் கிடையாதடி.
பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல்
மண்ணாலே இல்லையடி குதம்பாய்
மண்ணாலே இல்லையடி.
ஐந்து சரக்கொடு விந்துநா தம் சேரில்
வெந்திடும் லோகமடி குதம்பாய்
வெந்திடும் லோகமடி.
முப்பிணி தன்னை அறியாத மூடர்கள்
எப்பிணி தீர்ப்பாரடி குதம்பாய்
எப்பிணி தீர்ப்பாரடி.
எட்டெட்டும் கட்டி இருக்குமேற் தீயினிற்
விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய்
விட்டோடும் நோய்கள் எல்லாம்.
நாடி ஒருபது நன்காய் அறிந்திடில்
ஓடிவிடும் பிணியே குதம்பாய்
ஓடுவிடும் பிணியே.
சத்தவகை தாது தன்னை அறிந்தவன்
சுத்த வயித்தியனே குதம்பாய்
சுத்த வயித்தியனே.
வாயு ஒருபத்தும் வாய்த்த நிலைகண்டோன்
ஆயுள் அறிவானடி குதம்பாய்
ஆயுள் அறிவானடி.
ஆயுள் வேதப்படி அவிழ்த முடித்திடில்
மாயும் வியாதியடி குதம்பாய்
மாயும் வியாதிபடி.
பொற்பாந்த முப்பூவைப் போதம் பொசித்தவர்
கற்பாந்தம் வாழ்வாரடி குதம்பாய்
கற்பாந்தம் வாழ்வாரடி.
வேவாத முப்பூவை வேண்டி உண் டார்பாரில்
சாவாமல் வாழ்வாரடி குதம்பாய்
சாவாமல் வாழ்வாரடி.
விந்து விடார்களே வெடிய சுடலையில்
வெந்து விடார்களடி குதம்பாய்
வெந்து விடார்களடி.
தொல்லைச் சடம்விட்டுச் சுட்ட சடம்கொண்டோர்
எல்லையில் வாழ்வாரடி குதம்பாய்
எல்லையில் வாழ்வாரடி.
தோற்பையை நீக்கிநற் சோதிப்பை கொண்டவர்
மேற்பைநஞ் சுண்பாரடி குதம்பாய்
மேற்பைநஞ் சுண்பாரடி.
மாற்றினை ஏற்ற வயங்கும்நெடி யோர்களே
கூற்றினை வெல்வாரடி குதம்பாய்
கூற்றினை வெல்வாரடி.
கோயில் பலதேடிக் கும்பிட்ட தால்உனக்கு
ஏயும் பலன் வருமோ? குதம்பாய்
ஏயும் பலன் வருமோ?
சித்தத் தலம்போலத் தெய்வம் இருக்கின்ற
சுத்தத் தலங்களுண்டோ? குதம்பாய்
சுத்தத் தலங்களுண்டோ?
மெய்த்தலத்து இல்லாத மெய்ப்பொருள் ஆனவர்
பொய்த்தலத் தெய்வத்துண்டோ? குதம்பாய்
பொய்த்தலத் தெய்வத்துண்டோ?
சிற்பர்கள் கட்டுந் திருக்கோயில் உள்ளாகத்
தற்பரம் வாழ்வதுண்டோ? குதம்பாய்
தற்பரம் வாழ்வதுண்டோ?
தன்னால் உண்டாம்சிட்டி தன்னாலே சிட்டித்த
புன்கோயில் உள்ளவன்யார்? குதம்பாய்
புன்கோயில் உள்ளவன்யார்?
அன்பான பத்தர் அகக்கோயில் கர்த்தற்கே
இன்பான கோயிலடி குதம்பாய்
இன்பான கோயிலடி.
தன்னுள் விளங்கிய சம்புவைக் காணாது
மன்னும் தலத்தெய்வதென்? குதம்பாய்
மன்னும் தலத்தெய்வதென்?
இருந்த இடத்தில் இருந்தே அறியாமல்
வருந்தித் திரிவதென்னோ? குதம்பாய்
வருந்தித் திரிவதென்னோ?
காசி ராமேச்சுரம் கால் நோவச் சென்றாலும்
ஈசனைக் காணுவையோ? குதம்பாய்
ஈசனைக் காணுவையோ?
பூவதில் நாளும் பொருந்தித் திரியினும்
தேவனைக் காணுவையோ? குதம்பாய்
தேவனைக் காணுவையோ?
உள்ளங்கால் வெள்ளெலும்பாக உலாவினும்
வள்ளலைக் காணுவையோ? குதம்பாய்
வள்ளலைக் காணுவையோ?
போரினில் ஊசி பொறுக்கத் துணிதல்போல்
ஆரியன் தேடுதலே குதம்பாய்
ஆரியன் தேடுதலே.
சாதனை யாலே தனிப்பதஞ் சேரார்க்கு
வேதனை யாகுமடி குதம்பாய்
வேதனை யாகுமடி.
வேதனை நீங்கி விடாது தொடர்ந் தோரே
நாதனைக் காணுவர்காண் குதம்பாய்
நாதனைக் காணுவர்காண்.
நாடில் வழக்கம் அறிந்து செறிந்தவர்
நீடொளி காணுவரே குதம்பாய்
நீடொளி காணுவரே.
மீளா வியாதியில் மேன்மேலும் நொந்தார்க்கு
நாளேது கோளேதடி குதம்பாய்
நாளேது கோளேதடி.
தீட்டால் உடம்பு திறங்கொண்டிருக்கையில்
தீட்டென்று சொல்வதென்னை? குதம்பாய்
தீட்டென்று சொல்வதென்னை?
செத்தபின் சாப்பறை செத்தார்க்குச் சேவித்தால்
சத்தம் அறிவாரடி குதம்பாய்
சத்தம் அறிவாரடி.
தந்தைதாய் செய்வினை சந்ததிக்கு ஆமென்பார்
சிந்தை தெளிந்திலரே குதம்பாய்
சிந்தை தெளிந்திலரே.
பிள்ளைகள் செய்தன்மம் பெற்றோர்க்கு உறுமென்றால்
வெள்ளறி வாகுமடி குதம்பாய்
வெள்ளறி வாகுமடி.
பந்தவினைக்கு ஈடாடிப் பாரிற் பிறந்தோர்க்குச்
சொந்தமது இல்லையடி குதம்பாய்
சொந்தமது இல்லையடி.
பார்ப்பார் சடங்கு பலனின்று பாரிலே
தீர்ப்பாக எண்ணிடுவாய் குதம்பாய்
தீர்ப்பாக எண்ணிடுவாய்.
அந்தணர்க்கு ஆவை அளித்தோர்கள் ஆவிக்குச்
சொந்தமோ முத்தியடி குதம்பாய்
சொந்தமோ முத்தியடி.
வேதியர் கட்டிய வீணான வேதத்தைச்
சோதித்துத் தள்ளடியோ குதம்பாய்
சோதித்துத் தள்ளடியோ.
தன்பாவம் நீக்காத தன்மயர் மற்றவர்
வன்பாவம் நீக்குவரோ? குதம்பாய்
வன்பாவம் நீக்குவரோ?
kudambai Couplet,குதம்பைச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,kudambai padalgal in tamil lyrics,devotional songs,Poet kudambai siddhar