இடைக்காட்டுச் சித்தர் பாடல்



புல்லாங்குழலூதல்

நாற்போற் பொறிகளை நாநாவிதம் விட்டோர்
பேயரென் றூதுகுழல் - கோனே
பேயரென் றூதுகுழல்.

ஓடித் திரிவோர்க் குணர்வுகிட் டும்படி
சாடியே யூதுகுழல் - கோனே
சாடியே யூதுகுழல்.

ஆட்டுக்கூட் டங்களை அண்டும் புலிகளை
ஒட்டியே யூதுகுழல் - கோனே
ஒட்டியே யூதுகுழல்.

மட்டிக் குணமுள்ள மாரீச நாய்களை
கட்டிவைத் தூதுகுழல் - கோனே
கட்டிவைத் தூதுகுழல்.

கட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும்
கிட்டாவென் றூதுகுழல் - கோனே
கிட்டாவென் றூதுகுழல்.

பெட்டியிற் பாம்பெனப் பேய்மன மடங்க
ஒட்டியே யூதுகுழல் - கோனே
ஒட்டியே யூதுகுழல்.

எனதென்றும் யானென்றும் இல்லா திருக்கவே
தனதாக வூதுகுழல் - கோனே
தனதாக வூதுகுழல்.

அற்றவிடமொன்றே யற்றதோ டுற்றதைக்
கற்றதென் றூதுகுழல் - கோனே
கற்றதென் றூதுகுழல்.

பால்கறத்தல்

சாவா திருந்திடப் பால்கற - சிரம்
தன்னி லிருந்திடும் பால் கற
வேவா திருந்திடப் பால்கற - வெறும்
வெட்ட வெளிக்குள்ளே பால்கற.

தோயா திருந்திடும் பால்கற - முனைத்
தொல்லை வினையறப் பால்கற
வாயா லுமிழ்ந்திடும் பால்கற - வெறும்
வயிறார வுண்டிடப் பால்கற.

நாறா திருந்திடும் பால்கற - நெடு
நாளு மிருந்திடப் பால்கற
மாறா தொழுகிடும் பால்கற - தலை
மண்டையில் வளரும் பால்கற.

உலகம் வெறுத்திடும் பால்கற - மிக்க
ஒக்காள மாகிய பால்கற
கலசத் தினுள்விழப் பால்கற - நிறை
கண்டத்தி னுள்விழப் பால்கற.

ஏப்பம் விடாமலே பாற்கற - வரும்
ஏமன் விலக்கவே பால்கற.
தீப்பொறி யோய்ந்திடப்பால்கற - பர
சிவத்துடன் சாரவே பால்கற.

அண்ணாவின் மேல்வரும் பால்கற - பேர்
அண்டத்தி லூறிடும் பால்கற
விண்ணாட்டி லில்லாத பால்கற - தொல்லை
வேதனை கெடவே பால்கற.

கிடை கட்டுதல்

இருவினையான மாடுகளை ஏகவிடு கோனே - உன்
அடங்குமன மாடொன்றை யடக்கிவிடு கோனே.

சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் - நாளும்
தவமவமாக் கழிப்பவரே சனனமதில் வருவார்.

அகங்கார மாடுகண்மூன் றகற்றிவிடு கோனே - நாளும்
அவத்தையெனும் மாடதைநீ யடக்கிவிடு கோனே.

ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டுக் கோனே - உடன்,
உறையுமிரு மலந்தனையு மோட்டிக் கட்டுகோனே.

மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுகோனே - மிக,
முக்கால நேர்மையெல்லா முன்பறிவாய் கோனே.

இந்திரியத் திரயங்களை இறக்கிவிடு கோனே - என்றும்
இல்லையென்றே மரணங்குழு லெடுத்தூது கோனே.

உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே - உனக்கு
உள்ளிருக்குங் கள்ளமெல்லாம் ஓடிப்போங் கோனே.

முக்காய மாடுகளை முன்னங்கட்டு கோனே - இனி
மோசமில்லை நாசமில்லை முத்தியுண்டாங் கோனே.

கன்மபல மாடுகளைக் கடைக்கட்டு கோனே - மற்றக்
கன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டு கோனே.

காரணக்கோ மூன்றனையுங் கால்பிணிப்பாய் கோனே - நல்ல
கைவசமாஞ் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே.

பிரமாந்த ரத்திற் பேரொளி காணெங்கள் கோனே - வாய்
பேசா திருந்து பெருநிட்டை சாரெங்கள் கோனே.

சிரமதிற் கமலச் சேவை தெரிந்தெங்கள் கோனே - முத்தி
சித்திக்குந் தந்திரஞ் சித்தத் தறியெங்கள் கோனே.

விண்ணாடி வத்துவை மெய்யறிவிற் காணுங் கோனே - என்றும்
மெய்யே மெய்யிற்கொண்டு மெய்யறிவிற் செல்லுங் கோனே.

கண்ணாடி யினுள்ளே கண்பார்த் துக்கொள்ளுங் கோனே - ஞானக்
கண்ணன்றிக்கண்ணாடி காணவொண்ணா தெங்கள் கோனே.

சூனியமானதைச் சுட்டுவா எங்குண்டுகோனே - புத்தி
சூக்குமமே யதைச்சுட்டு மென்றெண்ணங் கொள் கோனே.

நித்திய மானது நேர்படி லேநிலை கோனே - என்றும்
நிற்குமென் றேகண்டு நிச்சயங் காணெங்கள் கோனே.

சத்தியும் பரமுந் தன்னுட் கலந்தே கோனே - நிட்டை
சாதிக்கி லிரண்டுந் தன்னுள்ளே காணலாங் கோனே.

மூகைபோலிருந்து மோனத்தைச் சாதியெங்கோனே - பர
மூலநிலைகண்டு முட்டுப் பிறப்பறு கோனே.




Meta Information:
idaikaadar Couplet,இடைக்காட்டுச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,idaikaadar padalgal in tamil lyrics,devotional songs,Poet idaikaadar siddhar,idaikadar siddhar

இவ்வலைத்தளத்தில் குக்கீஸ்(cookies) பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவது நபராகிய கூகுள் நிறுவனத்தின்(Google Analytics, Google Adsense, Youtube) சேவை மற்றும் விளம்பரத்தின் பொருட்டு குக்கீஸ்(cookies) பயன்படுத்தப்படுகிறது. மேலும் விவரமறிய வலைத்தளத்தின் உரிமை இணைப்பை சென்று பார்வையிடவும்.