அழுகணிச் சித்தர் பாடல்



வாத கற்பம்

உத்தமர்க்குச் சொன்னேன்நான் - ஆத்தாளே
உயர வெளிகண்டதெல்லாம்
பத்தியுள்ள பத்தர்கட்கு - ஆத்தாளே
பலிக்கும்பார் கண்டாயே.

பத்தியுடன் செய்துவந்தாள் - ஆத்தாளே
பரம்பொருளுந் தோன்றுமடி
சித்தி அடைந்தவர்க்கு - ஆத்தாளே
தெரியுமே சோதியுந்தான்.

மாணிக்கத்து உள்ளொளிபோல் - ஆத்தாளே
மருவிய சோதிதனைப்
பேணித் தொழும்அடியார் - ஆத்தாளே
பேசாப் பிரமமடி.

அன்றுமுதல் இன்றளவும் - ஆத்தாளே
அறியாப் பருவமதில்
என்றும் பொதுவாக - ஆத்தாளே
இருந்த ரகசியந்தான்.

ஓங்காரங் கொண்டு - ஆத்தாளே
உள்மூலந் தான்தெரிந்து

உள்ளுணர்வாய் நின்றிருக்கும் - ஆத்தாளே
ஓங்காரம் தன்னையுமே
எள்ளுளவா கிலுந்தான் - ஆத்தாளே
ஏத்தித் துதிப்பாயே.

பாவிகள் தங்களுக்கு - ஆத்தாளே
பரிவாக இந்நூலைத்
தாவிக் கொடுக்காதே - ஆத்தாளே
சண்டாளர் தங்களுக்கே.

அனுபோக கற்பசித்தி - ஆத்தாளே
ஆகுமிதைப் படித்தோர்
மனுவிக்யா னந்தெரிந்து - ஆத்தாளே
வாழ்வார் வெகுகோடி.

ஆறாதாரம்

ஞானநூல் கற்றால் எவன் தற்றுறவு பூண்டால் என்
மோன சமாதி முயன்றால் என் - தானாகி
எல்லாக் கவலையும் ஆற்று இன்புற் றிருப்பதுவே
சொல்லாரும் முத்தி சுகம்.

மேலத் தெருவாகி விந்துதித்த வீடாகிக்
கோலத்தி னாலேயடி கூறும் அறுகோணம்
சீலத்தில் முக்கோணம் சேர்ந்தப்பு வீடாகி
மூலத்தில் மண்ணாகி - என் ஆத்தாளே
முதலெழுத்தைப் போற்றி செய்தேன்.

ஆதியெனும் மூலமடி அவ்வோடே உவ்வாகி
நீதியெனும் நாளமடி நின்று விசையெழுப்பி
சாதிமதி யென்னும் தாகவிடாய் தானடங்கிச்
சோதிவிந்து நாதமென்ன - என் ஆத்தாளே
சுக்கிலமாய் நின்றதடி.

துய்யவெள்ளை ஆனதடி துலங்கும்வட்டத் தோரெழுத்து
மெய்யில்நடு நாளமடி விளங்கும்விந்து தான்இரங்கிப்
பைரஅளவு யோனியிலே பராபத்தி லேவிழுந்து
செய்யவட்ட மாகியடி - என் ஆத்தாளே
சீமுல மாச்சுதடி.

நவ்வோடே மவ்வாகி நாலிதழின் மேற்படர்ந்து
உவ்வோடே சவ்வாகி உயர்வுன்னி யூடெழுந்து
நவ்வோடே மவ்வாகி நாடுகின்ற காலாகி
இவ்வோ டுதித்தாண்டி - என் ஆத்தாளே
இலங்குகின்ற திங்களடி.

கதிரங்கி யாகியடி கருணையினில் விந்திரங்கி
உதிரம் திரட்டியபடி ஓமென் றதனிலுன்னி
சதுரமது மண்ணாகிச் சதுர்முகனார் வீடாகி
மதுரம் பிறந்துதடி - என் ஆத்தாளே
வையகனாய் வந்தாண்டி.

மெப்பாகச் சதுரமடி மெய்யாய் அதிற்பரந்து
ஒப்பாய் நடுநாளாம் ஓங்கி அதில்முளைத்துச்
செப்பார் இளமுலையார் சீருடனே தானிருந்து
அப்பாலே மாலாகி - என் ஆத்தாளே
ஆனந்த மானதடி.

உன்னியப்பு மேலேயடி ஓங்கிக் கதிர்பரந்து
மின்னியதில் தான்முளைத்து மேவுகின்ற சீயாகிப்
பன்னிவரு முக்கோணப் பதியதனி லேமுளைத்து
வன்னியென்னும் பேராகி - என் ஆத்தாளே
மருவுகின்ற ருத்ரனடி.

வீரான வன்னியதன் மேல்நாளந் தான்முளைத்து
ஓராறு கோணமதாய் உள்ளேஓர் காலாகிப்
பேராகி நின்றுதடி பெருங்கிளையாங் கூட்டமதில்
மாறாமல் மாறியடி - என் ஆத்தாளே
வையத் துதித்தாண்டி.

உதையாமல் என்னைஇப்போது உதைத்தவனும்கீழிறங்கி
மதியான மூலமதில் வந்திருந்துக் கொண்டான்டி
நிதியாம் மிரண்டெலும்பு நீளெலும்பிரண்டாகி
முதியாத மாங்கிசமும் - என் ஆத்தாளே
மூடி யதிலிருந்து.

மாதவளைக் குள்ளேயடி வந்தவது கீழ்ப்படர்ந்து
போதத்தின் முட்டியடி புகழ்நரம்பை உண்டுபண்ணி
நீதம தாகவிந்த நீள்நிலத்தி லேதிரியப்
பாதமாய் உன்னியடி - என் ஆத்தாளே
பதியாய் வளர்ந்ததடி.

இருகண்ணின் மேலேயடி இருந்தநரம் பூடுசென்று
பெருநரம்பாய் விம்மிப் பெருக்க முளைத்ததடி
தரிநரம்பும் ஈரெலும்பாய்த் தான்ஒன்பது எலும்பாய்
விரிநரம்பு போலாக - என் ஆத்தாளே
மேலாய் நுழைந்ததடி.

இட்ட எழுத்திரண்டில் ஏங்கியதில் மேற்படர்ந்து
எட்டமதி போலெலும்பு வளர்ந்து கவிந்ததடி
எட்டிரண்டும் ஒன்றாகி இருந்தவர்க்கு வீடாச்சு
வெட்டவெளி யானதடி - என் ஆத்தாளே
மெய்யாய் இருந்துதடி.

அகார உகாரத்தில் ஆசூனி யம்பிறந்து
அகாரந் தனில்இரங்கி அரிமூலம் தன்னில்வந்து
உகாரத்துள் ஆவேறி ஓடி உலாவுவதற்கு
நிகரற்ற நாதனடி - என் ஆத்தாளே
லிங்கமாய் வந்தான்டி.

கருவாகி வந்தானோ கருவழிக்க வந்தானோ
உருவாகி வந்தானோ உருவழிக்க வந்தானோ
குருவாகி வந்தானோ குலமறுக்க வந்தானோ
திருவாகி வந்தானோ - என் ஆத்தாளே
சீர்திருத்த வந்தானோ.

மெய்ஞ்ஞானம்

ஐங்கரனைத் தெண்டனிட்டு அருளடைய வேணுமென்று
தங்காமல் வந்தொருவன் - என் ஆத்தாளே
தற்சொரூபங் கொண்டாண்டி.

உள்ளது ஒளியாக ஓங்காரத்து உள்ளிருந்து
கள்ளப் புலனறுக்க - என் ஆத்தாளே
காரணமாய் வந்தாண்டி.

ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோ ரட்சரமும்
சூதானக் கேட்டையெல்லாம் - என் ஆத்தாளே
சுட்டான் துருசாலே.

என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந் தனித்தேனே - என் ஆத்தாளே
தானிருக்க மாட்டேண்டி.

கல்லில் ஒளியானைக் கருத்தி விளியாளைச்
சொல்லி அழுதாலொழிய - என் ஆத்தாளே
துயரம் எனக்கு ஆறாதே.

மண்முதலாய் ஐம்பூதம் மாண்டுவிடக் கண்டேன்டி
விண்முதலாய் ஐம்பொறியும் - என் ஆத்தாளே
வெந்துவிடக் கண்டேன்டி.

ஆங்காரந் தான்கெடவே ஆறடுக்கு மாளிகையும்
நீங்காப் புலன்களைந்தும் - என் ஆத்தாளே
நீறாக வெந்துதடி.

போற்றும்வகை எப்படியோ பொறிபேத கம்பிறந்தால்
ஆத்தும தத்துவங்கள் - என் ஆத்தாளே
அடுக்கழிய வெந்ததடி.

வித்தியா தத்துவங்கள் விதம்விதமாய் வெந்ததடி
சுத்துவித்தை அத்தனையும் - என் ஆத்தாளே
சுட்டான் துருசறவே.

கேடுவரும் என்றறியேன் கெடுமதிகண் தோற்றாமல்
பாடுவரும் என்றறியேன் - என் ஆத்தாளே
பதியில் இருந்தாண்டி.

எல்லோரும் போனவழி இன்னவிட மென்றறியேன்
பொல்லாங்கு தீரவடி - என் ஆத்தாளே
பொறிஅழியக் காணேன்டி.

உட்கோட்டைக்கு உள்ளிருந்தோர் ஒக்கமடிந்தார்கள்
இக்கோட்டைக் குள்ளாக - என் ஆத்தாளே
எல்லோரும் பட்டார்கள்.

உட்கோட்டை தானும் ஊடுருவ வெந்தாக்கால்
கற்கோட்டை எல்லாம் - என் ஆத்தாளே
கரிக்கோட்டை ஆச்சுதடி.

தொண்ணூற்று அறுவரையும் சுட்டேன் துருசறவே
கண்ணேறு வாறாமல் - என் ஆத்தாளே
கருவருக்க வந்தான்டி.

ஓங்காரம் கேட்குதடி உள்ளமெல்லாம் ஒக்குதடி
ஆங்காரம் பட்டுவிழ - என் ஆத்தாளே
அடியோடு அறுத்தாண்டி.

முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி
தன்னையறிந்து - என் ஆத்தாளே
தானொருத்தி யானேன்டி.

என்னை எனக்கறிய இருவினையும் ஊடறுத்தான்
தன்னை அறியவாடி - என் ஆத்தாளே
தனித்திருக்கல் னேன்டி.

இன்னந் தனியேநான் இங்கிருக்க மாட்டேன்டி
சொன்னசொற் றிரவடிவு - என் ஆத்தாளே
சுட்டான் துருசறவே.

வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளி யாச்சுதடி
காட்டுக்கு எரித்தநிலா - என் ஆத்தாளே
கனாவாச்சு கண்டதெல்லாம்.

நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்குப் பட்டலவோ
பகையாரோ விண்டவர்கள் - என் ஆத்தாளே
பாசம் பகையாச்சே.

என்னையிவன் சுட்டாண்டி எங்கே இருந்தான்டி
கன்னி அழித்தாண்டி - என் ஆத்தாளே
கற்பைக் குலைத்தான்டி.

உள்ளுரையிற் கள்ளனடி உபாயம் பலபேசிக்
கள்ளக்கண் கட்டியடி - என் ஆத்தாளே
காலைப் பிடித்தான்டி.

பற்றத்தான் பற்றுவரோ பதியி லிருந்தான்டி
எற்றத்தான் என்றவரோ - என் ஆத்தாளே
என்னை அறிந்தான்டி.

கண்டாருக்கு ஒக்குமடி கசடுவித்தை அத்தனையும்
பெண்டாக வைப்பனென்று - என் ஆத்தாளே
பேசாது அளித்தான்டி.

மால்கோட்டை இட்டுமென்னை வசையிலாக் காவல்வைத்
தோல்கோட்டை இட்டடியோ - என் ஆத்தாளே
தடுமாறச் சொன்னான்டி.

எந்தவித மோஅறியேன் இம்மாயஞ் செய்தான்டி
சந்தைக் கடைத்தெருவே - என் ஆத்தாளே
தடுமாறச் சொன்னான்டி.

சூலத்துக்கு ஆதியடி துன்பமுற வந்தூடே
பாலத்தில் ஏறியடி - என் ஆத்தாளே
பங்கம் அளித்தான்டி.




Meta Information:
kaduveli Couplet,அழுகணிச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,azhkkani padalgal in tamil lyrics,devotional songs,Poet azhkkani siddhar,azhkkanich siddhar