காலமூன் றுடங்கடந்த கதிரொளியை யுள்ளத்தாற்
சாலமின் றிப்பற்றிச் சலிப்பறவே போற்றீரே.
பாலிற் சுவைபோலும் பழத்தின் மதுப்போலும்
நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே.
மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே.
தூய மறைப்பொருளைச் சுகவா ரிதியமிர்தை
நேய முடனாளு நிலைபெறவே போற்றீரே.
சராசரத் தைத்தந்த தனிவான மூலமென்னும்
பராபரத் தைப்பற்றிப் பவமறவே போற்றீரே.
மண் ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்
கண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே.
பொய்ப்பொருளை விட்டுப் புலமறிய வொண்ணாத
மெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே.
எள்ளிற்றை லம்போல எங்கும் நிறைபொருளை
உள்ளிற் றுதித்தே யுணர்வடைந்து போற்றீரே.
பூமியெல்லா மோர்குடைக்கீழ் பொருந்தவர சாளுதற்குக்
காமியம்வைத் தாலுனக்குக் கதியுளதோ கன்மனமே.
பெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால்
விண்ணாசை வைக்க விதியிலையே கன்மனமே.
மேயும் பொறிகடமை மேலிடவொட் டார்க்குவினை
தேயுமென்றே நல்வழியிற் செல்லுநீ கன்மனமே.
பொன்னிச்சை கொண்டு பூமிமுற் றுந்திரிந்தால்
மன்னிச்சை நோக்கும் வாய்க்குமோ கன்மனமே.
பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கங் கொள்ளாமல்,
மெய்யான ஞானக்கல்வி விரும்புவாய் கன்மனமே.
பேய்க்குரங்கு போலப் பேருலகி லிச்சைவைத்து,
நாய்நரிகள் போலலைந்தேன் நன்மையுண்டோ கன்மனமே.
இரும்பையிழுக் குங்காந்தத் தியற்கைபோற் பலபொருளை,
விரும்பினதால் அவைநிலையோ விளம்புவாய் கன்மனமே.
கற்பநிலை யால்லவோ கற்பகா லங்கடத்தல்
சொற்பநிலை மற்றநிலை சூட்சங்காண கன்மனமே.
தேக மிழப்பதற்குச் செபஞ்செய்தென் தவஞ்செய்தென்,
யோகமட்டுஞ் செய்தாலென் யோசிப்பாய் கன்மனமே.
சாகா திருப்பதற்குத் தான்கற்ற கல்வியன்றோ
வாகான மெய்க்கல்வி வகுத்தறிநீ கன்மனமே.
எல்லாப் பொருள்களையு மெண்ணப் படிபடைத்த
வல்லாளன் றன்னை வகுத்தறிநீ புல்லறிவே.
கட்புலனுக் கெவ்வளவுங் காணா திருந்தெங்கும்
உட்புலனாய் நின்றவொன்றை உய்த்தறிநீ புல்லறிவே.
விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்க முண்டாகும்,
செழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்ததறிநீ புல்லறிவே.
மெய்யிலொரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்
பொய்யிலொரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே.
ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே
கூத்துப் புரிகின்ற கோளறிவாய் புல்லறிவே.
இருட்டறைக்கும் நல்விளக்காய் இருக்குமுன்றன் வல்லமையை,
அருட்டுறையில் நிறுத்திவிளக் காகுநீ புல்லறிவே.
நல்லவழியிற் சென்று நம்பதவி யெய்தாமல்
கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே.
கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல
மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே.
வாசிக்கு மேலான வான்கதியுன் னுள்ளிருக்க
யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே.
அன்னையைப் போலெவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முத்தியடை புல்லறிவே.
அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீ பற - பர
மானந்தங் கண்டோமென்று தும்பீ பற
மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற - மலை
மேலேறிக் கொண்டோமென்று தும்பீபற.
அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை
ஆணவங்க ளற்றோமென்றே தும்பீபற
தொல்லைவினை நீங்கிற்றென்றே தும்பீபற - பரஞ்
சோதியைக் கண்டோமெனத் தும்பீபற.
ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
அருவே பொருளாமெனத் தும்பீபற
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு
தெய்வீகங் கண்டோமென்றே தும்பீபற.
மூவாசை விட்டோமென்றே தும்பீபற - பர
முத்திநிலை சித்தியென்றே தும்பீபற
தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்த
செகத்தை யொழித்தோமென்று தும்பீபற.
பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்
பற்றற்றோ மென்றேநீ தும்பீபற
வாழ்விட மென்றெய்தோந் தும்பீபற - நிறை
வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற.
எப்பொருளுங் கனவென்றே தும்பீபற - உல
கெல்லாம் அழியுமென்றே தும்பீபற
அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்
அழிவில்லாதது ஆதியென்று தும்பீபற.
கரணங்கள் ஒருநான்கு மடங்கினவே - கெட்ட
காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே.
சரணங்கள் ஒருநான்குங் கண்டனமென்றே - நிறை
சந்தோஷ மாகவே கூவுகுயிலே.
உலகமோக் காளமாமென் றோதுகுயிலே - எங்கள்
உத்தமனைக் காண்பரிதென் றோதுகுயிலே
பலமதம் பொய்ம்மை யேயென் றோதுகுயிலே - எழு
பவமகன்யே றிட்டோம் நாமென் றோதுகுயிலே.
சாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே - எல்லாத்
தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேகார்குயிலே
மாதவங்கள் போலும் பலன் வாயாக் குயிலே - மூல
மந்திரங்கள் தான்மகிமை வாய்க்குங்குயிலே.
எட்டிரண்ட றிந்தோர்க்கிட ரில்லைகுயிலே - மனம்
ஏகாம னிற்கிற்கதி யெய்துங்குயிலே
நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளுகுயிலே - ஆதி
நாயகனை நினைவில்வைத் தோதுகுயிலே.
ஆடுமயி லேநட மாடுமயிலே - எங்கள்
ஆதியணி சேடனைக்கண் டாடுமயிலே
கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றுங்
குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே.
இல்லறமே யல்லலாமென் றாடுமயிலே பக்தி
இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே
நல்லறமே துறவறங் காணுமயிலே - சுத்த
நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே.
கற்றூணைப் போல்மனதைக் காட்டுமயிலே - வரும்
காலனையுந் தூரத்தி லோட்டுமயிலே
பற்றூ டுருவவே பாயுமயிலே அகப்
பற்றுச்சறு மிறில்லாமற் பண்ணுமயிலே.
சிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தி னிழன்மறையும்
மறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கு மடவனமே.
காற்றின் மரமுறியுங் காட்சியைப்போல் நல்லறிவு
தூற்றிவிடி லஞ்ஞானந் தூரப்போம் மடவனமே.
அக்கினியால் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்
பக்குநல் லறிவாலே பாவம் போம் மடவனமே.
குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டிலுருப் படுத்தல்போல்
வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே.
அப்புடனே யுப்புச்சேர்ந் துளவுசரி யானதுபோல்
ஒப்புறவே பிரமமுட னொன்றிநில்லு மடவனமே.
காய்ந்த இரும்புநிறங் காட்டுதல்போல் ஆத்துமத்தை
வாய்ந்திலங்கச் செய்து வளம்பெறுநீ மடவனமே.
தொல்லைப்பிறவி தொலைக்கார்க்கு முத்திதான்
இல்லையென் றூதுகுழல் - கோனே
இல்லையென் றூதுகுழல்.
இந்திர போகங்கள் எய்தினுந் தொல்லையென்
அந்தமா யூதுகுழல் - கோனே
அந்தமா யூதுகுழல்.
மோன நிலையினில் முத்தியுண் டாமென்றே
கானமா யூதுகுழல் - கோனே
கானமா யூதுகுழல்.
idaikaadar Couplet,இடைக்காட்டுச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,idaikaadar padalgal in tamil lyrics,devotional songs,Poet idaikaadar siddhar,idaikadar siddhar