திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: மருந்து / Medicine

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.



மருந்து என்பது தேவைப்படாதாம் உடம்பிற்கு உண்பதையும் செரிப்பதையும் ஆராய்ந்து போற்றி உண்டால்.



முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.



ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.



உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.


No need of medicine to heal your body's pain,
If, what you ate before digested well, you eat again.


No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.



marundhena vaeNtaavaam yaakkaikku arundhiyadhu
atradhu poatri uNin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வாத பித்த சிலேத்துமம் என மூன்றில் அளவு கூடுவதும் குறைவதுமே நோய். உண்ட உணவு செரித்தபின் போற்றி உண்பவருக்கு மருந்து தேவையில்லை. உணவை சரியாக தீர்மானித்தால் அளவை அறிந்து உண்டால் நோய் வராது. நோய் என்ன ஏன் வந்தது எப்படி தீர்ப்பது எந்த மாதரியான காலத்தில் வந்துள்ளது என்பதை ஆராய்ந்து மருந்து எடுக்க வேண்டும். நோயுற்றவர், அதை தீர்ப்பவர், மருந்துகள், பயன்படுத்தும் அளவு சொல்பவர் என நான்கு கூறுகளை உடையது மருத்துவம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.