திருவள்ளுவரின் திருக்குறள்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.



உடல் என்ற பொறியில் ஐந்து புலன் தந்தவனுக்கு உண்மையாக இருந்தால் உயர்வான வாழ்வு வாழலாம்.



ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.



மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.



மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.


Long live they blest, who 've stood in path from falsehood freed;
His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'


Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses



PoRivaayil aindhaviththaan Poidheer ozhukka
neRinhindraar needuvaazh Vaar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கடவுள் உண்டு அது இந்த உலகத்திற்கு துவக்கமாக உள்ளது. அதை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்துக் கொள்ளாமல் படிப்பதால் எந்த பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான். தேவையானவர் தேவை அற்றவர் என்ற பாகுபாடிகளை கடந்த அவரே குரு. அறியாமை உண்டாக்கும் இரு வினைகளை கடந்தவனே இறைமையை புரிந்து புகழை அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று வாழ்பவன் சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது உபதேசப் பொருளை அடையாமல் மனக்கவலை மாற்றுவது இயலாது. அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால் பிறவி துன்பமும் போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள் படைத்தவரை வணக்குவது நல்லது. பிறவி என்ற பெரிய கடலை கடக்க இறைவனின் துணை அவசியம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.