திருவள்ளுவரின் திருக்குறள்

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.



நேரில் நெருங்காதவரை நொந்துக் கொள்வார்கள் யார் எனப் பார்த்தால் அவர்கள் கனவிலும் காதலரை காணாதவர்கள்.



கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.



இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.



கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.


In dreams who ne'er their lover's form perceive,
For those in waking hours who show no love will grieve.


They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.



nanavinaal nalkaarai noavar kanavinaal
kaadhalark kaanaa thavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

காதலரை இணைக்க வந்த கனவை எப்படி கொண்டாடி மகிழ்வேன். மீன் போன்ற கண்கள் உறங்கும் தருணம் காதலரை கலந்தால் எப்படி உரைப்பேன். நேரில் நெருங்காத என் காதலர் கனவில் கலப்பதால் நிலைக்கிறது என் உயிர். கனவில் என் காமம் நிறைவாகிறது. நேரில் கண்ட சுகம் கனவு தருகிறது. நேரில் நடக்கவே நடக்காது என்றால் கனவில் நீங்காமல் இருக்கலாம். நேரில் வராத கொடிய காதலர் கனவில் வந்து பிழைக்கச் செய்கிறார். உறக்கத்தில் உறவாடி விழிப்பில் நெஞ்சம் நிறைகிறார். நேரில் நெருங்காதவரை நொந்துக் கொள்பவர்கள் கனவிலும் காணதவர்கள். நாங்கள் கூடவில்லை என நினைக்கும் இவ்வூர் மக்கள் கனவில் இணைவதை அறியாதவர்கள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.