பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: கண்விதுப்பழிதல் / Eyes consumed with Grief
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
அழுது அழுது கண்ணிர் வற்றியது மகிழ்ந்து மகிழ்ந்து விரும்பி அவரைக் கண்ட கண்.
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.
விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!.
அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்.
Aching, aching, let those exhaust their stream,
That melting, melting, that day gazed on him.
The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.
uzhandhuzhan thulneer aruka vizhaindhizhaindhu
vaenti avarkkanda kan
கண் தானாகவே தனக்கு காம நோய் உண்டாக்குகிறது. தெளிவாய் உணராமலேயே கண்டு அல்லல் படுகிறது. வேண்டும் என்று விரும்பி பார்த்து விலகி தவிக்கும் கண்ணின் செயல் நகைப்புக்குரியது. நீர் வடிந்து உலர்ந்த கண் நித்தியத்தை அடையும் காமநோய் கடவுள் மேல் வந்தால், பால் பற்றி வந்தால் பிறவித் தொடர் வரும். பிறவிக் கடல் கடக்கும் வேட்கையால் என் கண் இரவிலும் உறங்க மறுக்கிறது. இனிமையிலும் இனிமை இந் நோய் செய்த கண் இதனுடன் உட்படுவதால். அழுது அழுது கண்ணிர் வற்றினாலும் அவரை கண்டதால் மகிழ்வாய் இருக்கிறது. உறவு பாராட்டாமல் இருக்கவும் செய்யும் இம்மனிதர் இடத்தில் என் கண் அவரை காட்டிவிட்டது. விலகி நின்றாலும் கூடி மகிழ்ந்தாலும் உறக்கம் இல்லை இந்த கண்களுக்கு. மறைத்து வைப்பது ஊரார்க்கு அரிதாக இருக்க காரணம் என்னை போல் வெளிப்படுத்தும் கண் இருப்பதே.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.