திருவள்ளுவரின் திருக்குறள்

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.



பார்த்தாள் நேருக்கு நேர் பார்க்க, தாக்க வந்த தேவதை படை கொண்டு ஒன்றும் இல்லாதபடி செய்தது.



நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.



என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.



அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது.


She of the beaming eyes, To my rash look her glance replies,
As if the matchless goddess' hand Led forth an armed band.


This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me.



noakkinaaL noakkedhir noakkudhal thaakkaNangu
thaanaikkoN tanna thudaiththu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பெண்மையை கண்டு நெஞ்சம் அடையும் தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ள இந்த அதிகாரம் மறைமுகமாக இறமையை அடைந்தவனின் தன்மையை விளக்குகிறது. தேவதைகளால் விரும்பப்படும் மயிலாக என் நெஞ்சம் பெண்களால் கவரப்படுகிறதே. பார்வை ஒன்றே படை கொண்டு அழித்து ஒன்றுமற்றவனாய் என்னை தன்வசம் செய்ததே. உயிர் எடுக்கும் ஒருவன் இருப்பதை முன் அறியவில்லை அதை இவள் உணர்த்தினாள். உயிர் உணர்த்தும் கண் உயிர் எடுக்கவும் செய்யும் பேதையாக இருந்தால். எனவே அழிக்கும் எமனாக, அடிமைபடுத்தும் பிணையாக, வசப்படுத்தும் பொருளாக பெண்ணின் கண்கள் உள்ளன. வளைந்த புருவம் வில்லாக என்னை தாக்காமல் இருக்குமோ?. அடங்க யானைமேல் கல்பதங்கம் நிற்காததைப் போல் மார்பை மறைக்கும் துணி தடுமாறுகிறது. அவளோடு பொருத்துவதற்கு என்றே என் வலிமை குன்றியதோ?. போதை ஏற்றும் பார்வையும், நாணமும் தவிர இவளுக்கு வேறு சிறந்த அணிகலன் தேவையில்லை. இறைதாகம் அல்லது காமம் மட்டும் கண்டாலே போதை தரும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.