திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: சூது / Gambling

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.



விரும்பாதே வெற்றி பெற்றாலும் சூதினை வெற்றிதான் பொன் தூண்டிலின் முள்ளை விழுங்கிய மீன் போல் சிக்கச் செய்யும்.



வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.



வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.



வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கவ்விக் கொண்டது போலாகிவிடும்.


Seek not the gamester's play; though you should win,
Your gain is as the baited hook the fish takes in.


Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook.



vaeNtaRka vendritinum soodhinai vendradhooum
thooNtiRpon meenvizhungi atru

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.



ஒரு முறை வென்று நூறு முறை தோற்கும் சூதாடிகளுக்கு உண்டாகுமா? நன்மைகள் பெற்று சிறப்புடன் வாழும் வழி.



ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.



ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?.



ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?.


Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way
That they may good obtain, and see a prosperous day?.


Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ?



Ondreydhi Noorizhakkum Soodharkkum Untaangol
Nandreydhi Vaazhvadhor Aaru

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.



பெற்ற ஆதாயத்தை கூறி இடைவிடாது தாயம் உருட்டி (ஒருவகை சூது) கொண்டு இருந்தாள் உள்ள பொருளும் நிலைக்காது போகும்.



ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.



சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.



பணயம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈ.ட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்.


If prince unceasing speak of nought but play,
Treasure and revenue will pass from him away.


If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands.



uruLaayam Ovaadhu kooRin poruLaayam
poaoip puRamae padum

சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.



கேடு பல செய்து ஒழுங்குப்பட்ட வாழ்வை வறுமை தந்து அழிக்கும் சூதினைப் போல் வேறோன்று இல்லை.



ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.



துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.



பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.


Gaming brings many woes, and ruins fair renown;
Nothing to want brings men so surely down.


There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.



siRumai palaseydhu seerazhikkum soodhin
vaRumai tharuvadhondru il

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.



கவர்ந்து இழுக்கும் சூதாட்டக் கழகமும், சூதாட்டக் கருவிகளைக் கொண்ட கையும் அறிந்தவர் ஒன்றுமற்றவராக மாறுவார்.



சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.



சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.



சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.


The dice, and gaming-hall, and gamester's art, they eager sought,
Thirsting for gain- the men in other days who came to nought.


Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice).



kavaRum kazhakamum kaiyum tharukki
ivaRiyaar illaaki yaar

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.



அகநிறைவு அடையாமல் துன்பத்தில் நிலைப்பார்கள் சூது என்ற முட்டாள்தனத்தில் முழ்கியவர்கள்.



சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.



சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.



சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.


Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil,
They suffer grievous want, and sorrows sore bewail.


Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world.



akataaraar allal uzhapparsoo thennum
mukatiyaan mootappat taar

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.



அனுபவித்துப் பழகிய செல்வமும், காலகாலமாய் கடைபிடித்த நற்பண்பும் பாழாகிவிடும் சூதாட்ட கழகத்திற்கு காலையில் போனால்.



சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.



சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.



சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.


Ancestral wealth and noble fame to ruin haste,
If men in gambler's halls their precious moments waste.


To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character.



pazhakiya selvamum paNpum kedukkum
kazhakaththuk kaalai pukin

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.



பொருளாதார நிலையை சீரழித்து, பொய்யான வாழ்வை மேற்கொள்ளச் செய்து, அருள் அற்றவராக மாற்றி துன்பத்தில் திண்டாடச் செய்யும் சூது.



சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.



சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.



பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.


Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away
All grace, and leaves the man to utter misery a prey.


Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).



poruLketuththup poimaeR koLeei aruLketuththu
allal uzhappikkum soodhu

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.



உடை, செல்வம், உணவு, சுயஅறிவு, கற்ற கல்வி, என ஐந்தும் சேர்ந்து விலகிவிடும் சூதாட்டத்தை ஏற்றுக்கொண்டால்.



சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.



சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.



சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்.


Clothes, wealth, food, praise, and learning, all depart
From him on gambler's gain who sets his heart.


The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning.



udaiselvam ooN-oLi kalviendru aindhum
ataiyaavaam aayanG koLin

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.



இழந்தாலும் காதலிக்கும் சூதினைப் போல் துன்பம் சூழ்ந்தால் காதலிக்காது உயிர். (சூது தற்கொலைக்கு வழி வகுக்கும்)



பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.



துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.



பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்.


Howe'er he lose, the gambler's heart is ever in the play;
E'en so the soul, despite its griefs, would live on earth alway.


As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.



izhaththoRu-um kaadhalikkum soodhaepoal thunpam
uzhaththoru-um kaadhatru uyir


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தூண்டில் தங்கம் என்றாலும் மீனுக்கு அது ஆபத்தானது அப்படியே சூது. அது ஒருமுறை வெற்றிகாட்டி பலமுறை தோல்வி தந்து வறுமைக்கு உரிமையாக்கி உள்ளத்தை நிறைவற்றாக்கி விடும். பண்புடன், உடை செல்வம் உணவு சுய அறிவு கற்ற கல்வி ஐந்தையும் நம்மைவிட்டு விலகச் செய்யும். இத்தனை இழப்புக்கும் பின்னும் காதலிக்கப்படும் சூது போல் உயிரானது துன்பத்தை காதலிக்காது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.