திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கூடாநட்பு / Unreal Friendship   

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.



தக்க சமயம் கண்டு பட்டடைக்குள் எறியப்படும் பொருள் போல் எறிய வேண்டும் நேர்மையற்று உறவாடும் நட்பை.



அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.



மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.



மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.


Anvil where thou shalt smitten be, when men occasion find,
Is friendship's form without consenting mind.


The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.



seeritam kaaNin eRidhaRkup pattadai
naeraa nirandhavar natpu

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.



மனிதன் போன்று இருக்கும் மானிடப் பதர்களின் நட்பு பெண்மையற்றவள் மனம் போல் வேறுபடும்.



இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.



வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.



உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.


Friendship of those who seem our kin, but are not really kind.
Will change from hour to hour like woman's mind.


The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.



inampoandru inamallaar kaeNmai makaLir
manampoala vaeRu padum

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.



பல வகையில் நல்லவற்றை கற்க நேரிட்டாலும், மனம் செம்மையடைதல் பகையுணர்வு கொண்டவருக்கு அரிது.



பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.



மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.



அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.


To heartfelt goodness men ignoble hardly may attain,
Although abundant stores of goodly lore they gain.


Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.



palanhalla katrak kataiththu mananhallar
aakudhal maaNaark karidhu

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.



சிரித்த முகத்துடன் பழகி நெஞ்சத்தில் வஞ்சம் கொண்டோர்க்கு அஞ்சி விலக வேண்டும்.



முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.



நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.



சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.


'Tis fitting you should dread dissemblers' guile,
Whose hearts are bitter while their faces smile.


One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.



mukaththin iniya nakaaa akaththinnaa
vanjarai anjap padum

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.



மனம் நன்கு அமையாதவரை எதன் பொருட்டும் அவர் சொற்களைக் கொண்டு தேர்ந்த முடிவுக்கு வரக்கூடாது.



மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.



மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.



மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.


When minds are not in unison, 'its never; just,
In any words men speak to put your trust.


In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.



manaththin amaiyaa thavarai enaiththondrum
sollinaal thaeRaRpaatru andru

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.



நன்மைச் செய்பவர்ப்போல் நல்லதை சொன்னாலும் மனதிற்கு இசையாதவர் சொல்லின் உண்மைத் தன்மை உடனே உணரப் படும்.



நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.



நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.



பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.


Though many goodly words they speak in friendly tone,
The words of foes will speedily be known.


Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).



nattaarpoal nallavai sollinum ottaarsol
ollai uNarap padum

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.



பகைவரின் வார்த்தை வணக்கத்தை உண்மை என்ற ஏற்க வேண்டாம் அது வில்லின் வளைதல் போன்று தீங்கு ஏற்படுத்தும்.



வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.



வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.



பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது.


To pliant speech from hostile lips give thou no ear;
'Tis pliant bow that show the deadly peril near! .


Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.



solvaNakkam onnaarkaN koLLaRka vilvaNakkam
theengu kuRiththamai yaan

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.



தொழுகின்ற கையால் படையே அடங்கிவிடும் அதுபோல பகைவர் அழுகின்ற கண்ணிரில் வஞ்சகமும் இருக்கும்.



பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.



பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.



பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.


In hands that worship weapon ten hidden lies;
Such are the tears that fall from foeman's eyes.


A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.



thozhudhakai yuLLum padaiyotungum onnaar
azhudhakaN Neerum anaiththu

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.



அதிகபட்ச நட்பாக நடந்து தனக்குள் பகை எண்ணுபவரை சிரித்த முகத்துடனே நட்பினை விலக்கிட வழி செய்ய வேண்டும்.



புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.



வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.



வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.


'Tis just, when men make much of you, and then despise,
To make them smile, and slap in friendship's guise.


It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).



mikachcheydhu thammeLLu vaarai nakachcheydhu
natpinuL saappullaR paatru

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.



பகைவரும் நட்பாகவும் காலத்தில் சிரித்த முகத்துடனே நட்பினை மனதளவில் விலக்கிட வேண்டும்.



பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.



நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.



பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.


When time shall come that foes as friends appear,
Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear.


When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).



pakainhatpaam kaalam varungaal mukanhattu
akanhatpu oreei vidal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நேர்மையற்ற மனிடப் பதர்களின் நட்பு நல்லதல்ல. பகை உணர்வு வந்தால் பல நூல்களாலும் பக்குவம் பெறமுடியாது. போலியாக சிரிப்பதும் அழுவதும் மனிட பதர்களின் பண்பு இவர்களிடம் கவனமாக விலக வேண்டும். பகைவரின் நட்பு கட்டாயம் ஏற்கவேண்டிய சுழலில் மனதளவில் விலகி ஒதுக்க வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.