பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: இடனறிதல் / Knowing the Place
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.
முழுமையாக இடத்தை அறிந்து கொள்ளாமல் துவங்கக் கூடாது எந்தச் செயலையும் இகழவும் கூடாது.
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.
பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.
ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.
Begin no work of war, depise no foe,
Till place where you can wholly circumvent you know.
Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him.
thotangaRka evvinaiyum eLLaRka mutrum
itangaNda pin-al ladhu
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
முரண்பாடு உடைய கூட்டத்தை அடைந்தவருக்கும் நல்ல இடம் அமைந்தால் நன்மைகள் பல கிடைக்கும்.
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.
பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.
வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.
Though skill in war combine with courage tried on battle-field,
The added gain of fort doth great advantage yield.
Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.
muraNsaerndha moimpi navarkkum araNsaerndhaam
aakkam palavunh tharum
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
வழியற்றவரும் வழி கிடைத்து நல்ல இடம் அமர்ந்தால் வாழ்த்தாதவரும் வாழ்த்தும் வாய்ப்பை பெறுவார்.
தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்.
பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.
தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.
E'en weak ones mightily prevail, if place of strong defence,
They find, protect themselves, and work their foes offence.
Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.
aatraarum aatri adupa idanaRindhu
poatraarkaN poatrich seyin
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
எண்ணிய எண்ணத்தையே மாற்றிக் கொள்வார்கள் சேரும் இடம் அறிந்து சேர்ந்துக் கொண்டால்.
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.
ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர்.
ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
The foes who thought to triumph, find their thoughts were vain,
If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.
If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them.
eNNiyaar eNNam izhappar idanaRindhu
thunniyaar thunnich seyin
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
நிறைந்த நீரில் வெற்றிப் பெரும் முதலையை நீர் அற்ற இடத்தில் பிறவகைகளில் வெல்லப்படும் (இடம் பொறுத்தே நம் பலம் தீர்மானிக்கப் படுகிறது)
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.
முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.
தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.
The crocodile prevails in its own flow of water wide,
If this it leaves, 'tis slain by anything beside.
In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it.
nedumpunaluL vellum mudhalai atumpunalin
neengin adhanaip piRa
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
நிலத்தில் ஓடும் தேர் கடலிலும் கடலில் ஓடும் நாவாய் நிலத்திலும் ஓடாது. இடம் பொறுத்தே செயல்பாடுகள் இருக்கும்.
வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.
வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.
ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் தேர் கடலிலே ஓடாது கப்பல் நிலத்தில் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.
The lofty car, with mighty wheel, sails not o'er watery main,
The boat that skims the sea, runs not on earth's hard plain.
Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth.
kadaloataa kaalval nedundhaer kadaloadum
naavaayum Odaa nilaththu
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
அஞ்சாமைத் தவிர வேறு துணை வேண்டாம் அளவுக்கு அதிகமாய் எண்ணம் இல்லாமல் சரியான இடத்தை அறிந்துச் செயல்பட்டால்.
(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.
செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.
ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.
Save their own fearless might they need no other aid,
If in right place they fight, all due provision made.
You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations.
anjaamai allaal thuNaivaeNdaa enjaamai
eNNi idaththaal seyin
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
சிறிய படை என்றாலும் தனக்கு உரிய இடத்தில் இருந்து செயல்பட வலிமையான படையும் தனது ஆர்வத்தை இழக்கும்.
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.
சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.
If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail.
The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.
siRupadaiyaan sellidam saerin urupadaiyaan
ookkam azhindhu vidum
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
சீரும் சிறந்த பாதுகாப்பும் இல்லையென்றாலும் மனிதனைத் தான் வாழும் இடத்திற்குச் சென்று தாக்குவதுக் கடினம்.
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.
மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.
பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.
Though fort be none, and store of wealth they lack,
'Tis hard a people's homesteads to attack!.
It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.
siRainhalanum seerum ilareninum maandhar
uRainhilaththoadu ottal aridhu
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டால் நரியும் வீழ்த்திவிடும் வேல்கண்டும் அஞ்சாதுப் போரிட்ட யானையை.
வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.
பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.
வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.
The jackal slays, in miry paths of foot-betraying fen,
The elephant of fearless eye and tusks transfixing armed men.
A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.
kaalaazh kaLaril nariyatum kaNNanjaa
vaelaaL mukaththa kaLiRu
தடைகளை ஆய்ந்து அறிந்தபின் தகுந்த இடம் கண்டு எதையும் துவங்கலாம். தேர்ந்தெடுத்து செயல்பட்டால் தோல்வி வராது. செயல்படும் முன் சிந்திக்க வேண்டும் செயல்பட துவங்கிய பின் சிந்திப்பது தவறு. நன்மையிலும் தீமை உண்டாகும் காரணம் அதை பெறுபவர் பண்பைப் பொருந்ததே. பிறர் இகழாதபடி நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். சேற்றில் மாட்டிக் கொண்ட யானையை சிறு நரியும் சாய்க்கும் எனவே இடம் அறிந்து செயல்பட வேண்டும்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.