திருவள்ளுவரின் திருக்குறள்

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.



அற்பர்களுக்கு அஞ்சுவதே பெருமை சிறுமைதான் உறவுகளால் வளர்ந்து விடும்.



பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.



தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.



பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.


The great of soul will mean association fear;
The mean of soul regard mean men as kinsmen dear.


(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends.



sitrinam anjum perumai siRumaidhaan
sutramaach choozhndhu vidum

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.



நிலத்தின் இயல்பால் நீரானது தனது தன்மையில் இருந்து திரிந்துவிடும் அதுபோல் மனிதர்களுக்கும் தனது இனத்தின் இயல்பே அறிவு என்று அமைகிறது.



சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.



தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.



சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.


The waters' virtues change with soil through which they flow;
As man's companionship so will his wisdom show.


As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.



nilaththiyalpaal neerdhirinh thatraakum maandharkku
inaththiyalpa thaakum aRivu

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.



மனதின் தன்மைக்கு ஏற்ப மனித உணர்ச்சி அமையும் கூடும் கூட்டம் பொறுத்தே அடையாளச் சொல் அமையும். (எனவே சேரும் சபை அறிந்து சேர்த்தல் நலம்)



மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.



மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.



ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.


Perceptions manifold in men are of the mind alone;
The value of the man by his companionship is known.


The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.



manaththaanaam maandhark kuNarchchi inaththaanaam
innaan enappatunhj sol

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.



மனதின் இயல்பு போல் காட்டினாலும் ஒருவர் சார்ந்த இனத்தின் வெளிப்பாடாக இருப்பதே அறிவு.



ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.



அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.



ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.


Man's wisdom seems the offspring of his mind;
'Tis outcome of companionship we find.


Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.



manaththu Ladhupoalak kaatti oruvaRku
inaththuLa thaakum aRivu

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.



நல்ல எண்ணங்கள் கொண்ட மனத்தூய்மையும் சிறந்த செயல்கள் செய்யும் செய்வினைத் தூய்மையும் ஆகிய இரண்டும் தான் இருக்கும் இனத்தின் தூய்மையால் சிந்தாமல் வரும்.



மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.



மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.



ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.


Both purity of mind, and purity of action clear,
Leaning no staff of pure companionship, to man draw near.


Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.



manandhooimai seyvinai thooimai irandum
inandhooimai thoovaa varum

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.



மனதின் தூய்மையால் முடிவுகள் நன்றாக அமையும் இனத்தின் தூய்மையை காப்பவருக்கு இல்லை நன்மைகள் விளையும் வினை.



மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.



மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.



மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.


From true pure-minded men a virtuous race proceeds;
To men of pure companionship belong no evil deeds.


To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.



manandhooyaark kechchamnhan Raagum inandhooyaarkku
illainhan Raagaa vinai

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.



மனதின் சிறப்புத்தன்மை வாழும் உயிர்களுக்கும் நன்மை பயக்கும் இனத்தின் சிறப்புத்தன்மை எல்லா புகழையும் தரும்.



மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.



நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.



மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.


Goodness of mind to lives of men increaseth gain;
And good companionship doth all of praise obtain.


Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.



mananhalam mannuyirk kaakkam inanhalam
ellaap pukazhum tharum

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.



மனதின் சிறப்பு நன்றாக இருப்பவராயினும் உதாரணமாய் இருப்பவருக்கு இனத்தின் சிறப்பே உயர்த்திக் காட்டியது.



மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.



மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.



மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.


To perfect men, though minds right good belong,
Yet good companionship is confirmation strong.


Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.



mananhalam nankutaiya raayinum saandroarkku
inanhalam Emaap pudaiththu

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.



மனநலத்தால் மறுமையும் சிறப்பாகும் மேலும் இனத்தின் நலமும் சிறந்து விளங்கும்.



மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.



ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.



நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.


Although to mental goodness joys of other life belong,
Yet good companionship is confirmation strong.


Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.



mananhalaththin aakum maRumaimaR Raqdhum
inanhalaththin Emaap pudaiththu

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.



நல்ல இனத்தை விட துணையாவது வேறு இல்லை, தீய இனத்தை விட துன்பம் தருவதும் இல்லை.



நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.



ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.



நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.


Than good companionship no surer help we know;
Than bad companionship nought causes direr woe.


There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.



nallinaththi noongunh thuNaiyillai theeyinaththin
allaR patuppadhooum il


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மானிட பதர்களான சிறிய இனத்துடன் அதே இனம் மட்டுமே உறவு பாராட்டும். இருப்பிடத்தின் குணங்கள் நம்மை பற்றிவிடும் என்பதால் அறிவற்றதை அறிவாக காட்டும் என்பதை உணர்ந்து மனதை தூய்மை செய்யவேண்டும். மனத்தூய்மை உள்ள சான்றோர் இனப்பற்றுக் கொள்வதில்லை. மனத்தூய்மை உண்டானால் மறு பிறப்பும் நன்றாக அமையும் தீமையும் அண்டாது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.