திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: புகழ் / Renown   

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.



கொடுப்பது ஒத்திசைவுடன் வாழ்வது அதை விட சிறந்த ஊதியம் இல்லை உயிருக்கு



வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.



ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.



கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.


See that thy life the praise of generous gifts obtain;
Save this for living man exists no real gain.


Give to the poor and live with praise. There is no greater profit to man than that.



eedhal isaipada vaazhdhal adhuvalladhu
oodhiyam illai uyirkku

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.



பேசுபவர் பேசுவது எல்லாம் கேட்கப் படுபவருக்கு கொடுப்பவரின் சிறப்பை பற்றியே இருக்கும்.



புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.



சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.



போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.


The speech of all that speak agrees to crown
The men that give to those that ask, with fair renown.


Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.



uraippaar uraippavai ellaam irappaarkkondru
eevaarmael niRkum pukazh

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.



ஒத்திசைவு இல்லாத உலகத்தில் பாராட்டப்படுவதைத் தவிர அழியாமல் இருப்பது வேறொன்றும் இல்லை.



உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.



தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.



ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.


Save praise alone that soars on high,
Nought lives on earth that shall not die.


There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.



ondraa ulakaththu uyarndha pukazhallaal
pondraadhu niRpadhon Ril

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.



பூமியில் உள்ளவரை பெரும் பாராட்டுக்குறியதை செய்தால் எழுத்தாளரைப் பாராட்டாது புதிதாக தோன்றும் உலகம்.



நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.



தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.



இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.


If men do virtuous deeds by world-wide ample glory crowned,
The heavens will cease to laud the sage for other gifts renowned.


If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.



nilavarai neeLpukazh aatrin pulavaraip
poatraadhu puththaeL ulagu

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.



இரவைப்போல் கேட்டதையும் நிலைப்பதற்காக மரணமும் வித்தை அறிந்தவருக்கு அல்லாமல் மற்றவருக்கு அரிது.



புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.



பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.



துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.


Loss that is gain, and death of life's true bliss fulfilled,
Are fruits which only wisdom rare can yield.


Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.



naththampoal kaedum uLadhaakum saakkaatum
viththakark kallaal aridhu

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.



துவங்கினால் சிறப்பாக துவங்கவேண்டும் அப்படி முடியாதவர் துவங்குவதைவிட துவங்காமல் இருப்பதே நல்லது.



ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.



பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.



எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.


If man you walk the stage, appear adorned with glory's grace;
Save glorious you can shine, 'twere better hide your face.


If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.



thoandrin pukazhotu thoandruka aqdhilaar
thoandralin thoandraamai nandru

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.



சிறப்பாக வாழாதவர்கள் தன்னை கடிந்துக் கொள்ளாமல் தன்னை இழிவாக பேசுபவரை கடிந்துகொல்வதால் என்ன பயன்.



தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?.



புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.



உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?.


If you your days will spend devoid of goodly fame,
When men despise, why blame them? You've yourself to blame.


Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.



pukazhpata vaazhaadhaar thannhoavaar thammai
ikazhvaarai noavadhu evan

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.



குற்றம் என்பேன் உலகில் உள்ளவர்கெல்லாம் ஒத்திசைவு கொண்டவன் (நல்லவன்) என்ற முடிவை பெறாவிடின்.



தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.



புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.



தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.


Fame is virtue's child, they say; if, then,
You childless live, you live the scorn of men.


Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.



vasaiyenpa vaiyaththaark kellaam isaiyennum
echcham peRaaa vitin

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.



குற்றமற்ற சிறந்த நன்மையையும் குறையும் ஒத்திசைவு இல்லா உடம்பை பொறுத்துக்கொண்ட நிலத்திற்கு.



புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.



புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.



புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.


The blameless fruits of fields' increase will dwindle down,
If earth the burthen bear of men without renown.


The ground which supports a body without fame will diminish in its rich produce.



vasaiyilaa vaNnpayan kundrum isaiyilaa
yaakkai poRuththa nilam

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.



குற்றங்கள் ஒழிய வாழ்பவரே வாழ்பவர் ஒத்திசைவு ஒழிய வாழ்பவர் வாழாதவர்.



தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.



தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.



பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.


Who live without reproach, them living men we deem;
Who live without renown, live not, though living men they seem.


Those live who live without disgrace. Those who live without fame live not.



vasaiyozhiya vaazhvaarae vaazhvaar isaiyozhiya
vaazhvaarae vaazhaa thavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கொடுப்பதும் ஒத்திசைவு கொள்ளவதுமே ஒர் உயிரின் ஊதியம். கொடுக்கும் ஒருவரை புகழ்வதே சிறந்த பேச்சாக அமையும். தன் குற்றத்தை திருத்திக் கொள்ளாமல் அடுத்தவரை கடிந்துக் கொள்வது குற்றம். புகழோடு தோன்றுவதே சரியானது. குற்றமற்றவரே வாழ்பவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.