திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கயமை / Baseness   

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.



மனிதர்கள் போலவே இருப்பார்கள் கயவர்கள். அவர்களைப் போன்று ஒன்றுப் பட்ட ஒன்றை நான் கண்டதில்லை.



மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.



கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை.



குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.


The base resemble men in outward form, I ween;
But counterpart exact to them I've never seen.


The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species).



makkaLae poalvar kayavar avaranna
oppaari yaangaNda thil

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.



நல்லன அறிந்தவர்களை விட கயவர்கள் உயர்வு உள்ளவர்கள் காரணம் நெஞ்சத்தில் அவலம் இல்லாமல் இருப்பதால்.



நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.



நல்லது கெட்டதை அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம் உடையவர் ஆவர்; காரணம், கயவர் நல்லத கெட்டது என்ற கவலையே நெஞ்சில் இல்லாதவர்.



எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!.


Than those of grateful heart the base must luckier be,
Their minds from every anxious thought are free!.


The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good).



nandraRi vaariR kayavar thiruvudaiyar
nenjaththu avalam ilar

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.



வாழ்வாங்கு வாழும் தேவர்களுக்கு ஒப்பானவர்களே கயவர்கள் காரணம் விரும்பிய செயல்களை செய்து வாழ்வதால்.



கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.



தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.



புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.


The base are as the Gods; they too
Do ever what they list to do!.


The base resemble the Gods; for the base act as they like.



thaevar anaiyar kayavar avarundhaam
maevana seydhozhuka laan

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.



வெளிப்பட்ட கயவரைக் காண்டு அவரைவிட நான் மிகைப்பட்டவன் என்று இருமாப்புக் கொள்ளும் கீழ்.



கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.



தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.



பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்.


When base men those behold of conduct vile,
They straight surpass them, and exulting smile.


The base feels proud when he sees persons whose acts meaner than his own.



akappatti aavaaraik kaaNin avarin
mikappattuch chemmaakkum keezh

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.



அச்சமுடன் இருப்பதே கீழ் மக்களின் விடாது கடைபிடிக்கும் ஆசாரம். ஆசைப்பட்டால் எஞ்சிய சிறிது ஒழுக்கம் காணப்படும்.



கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.



கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.



தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.


Fear is the base man's virtue; if that fail,
Intense desire some little may avail.


(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.



achchamae keezhkaLadhu aasaaram echcham
avaavuNdael uNtaam siRidhu

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.



அறைந்து ஓசை எழுப்பும் பறை போன்றவர் கயவர் காரணம் கேட்ட மறைப்பொருளை தான் உணராது பிறர்க்கு உரைப்பதால்.



கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.



தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.



மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.


The base are like the beaten drum; for, when they hear
The sound the secret out in every neighbour's ear.


The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard



aRaipaRai annar kayavardhaam kaetta
maRaipiRarkku uyththuraikka laan

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.



ஈரக் கைகளைக் கூட உதராத கயவர்கள் மூக்கை உடைக்கும் வளைந்த கை உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு கொடுத்து உதவமாட்டார்கள்.



கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.



தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.



கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈ.கைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்.


From off their moistened hands no clinging grain they shake,
Unless to those with clenched fist their jaws who break.


The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.



eerngai vidhiraar kayavar kotiRudaikkum
koon-kaiyar allaa thavarkku

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.



உதாரணமாக சொல்வதற்கு பயன்படுபவர்கள் சான்றோர். கரும்பு போல் கொல்லப் பயன்படுபவர்கள் கீழானவர்கள்.



அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.



இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.



குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.


The good to those will profit yield fair words who use;
The base, like sugar-cane, will profit those who bruise.


The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.



Sollap Payanpatuvar Saandror Karumpupol
Kollap Payanpatum Keezh

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.



உடைகள் அணிவதையும் உணவுகள் உண்ணுவதையும் கண்டு அவர்களிடம் குற்றம் காண முயல்வார்கள் கீழானவர்கள்.



கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.



பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.



ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.


If neighbours clothed and fed he see, the base
Is mighty man some hidden fault to trace?.


The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.



uduppadhooum uNpadhooum kaaNin piRarmael
vadukkaaNa vatraakum keezh

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.



எதற்கு உரியவர் கயவர் என்று உற்று நோக்க விலைக்கு தன்னை அடிமையாக்கி கொள்ளவதில் விரைவாக செயல்படுகிறார்கள்.



கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.



தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?.



ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.


For what is base man fit, if griefs assail?
Himself to offer, there and then, for sale!.


The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?.



Etrir Kuriyar Kayavarondru Utrakkaal
Vitrarku Uriyar Viraindhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நல்மனிதர் போன்ற கயவரும் ஒன்றுபோலவே இருப்பார்கள், நல்லவை அறிந்தவர்களைவிட கயவர் உள்ளம் அவலம் இன்றி இருப்பதாலும், நினைத்ததை செய்வதாலும் உயர்வானவர்களாக தெரிகின்றார்கள். கயவரை சிறந்தவன் என்பவன் கிழானவன். சான்றாக இருப்பார்கள் நல்வர்கள், கரும்பாக நசுக்கப்படும் கீழானவர்கள் அச்சத்தை ஆசாரமாக கொள்வர். நல்லாடை அணிவதையும் நற்சோறு உண்ணுவதையும் கண்டு குற்றம் காண நினைப்பவர் கீழானவர்கள். கயவர்கள் தங்களை விலைக்கு அடிமையாக இருப்பதை விரைந்து செய்வார்கள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.