பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: பண்புடைமை / Courtesy
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
எண்களைப் போல் யாரும் புரிந்துக்கொள்ளும் வார்த்தைகளுடன் யாரிடமும் எளிமையாக பழுகுதலே பண்புடைமை என்பது வழக்கு.
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.
எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.
யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.
Who easy access give to every man, they say,
Of kindly courtesy will learn with ease the way.
If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.
eNpadhaththaal eydhal eLidhenpa yaarmaattum
paNputaimai ennum vazhakku
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
அன்பை உடமையாக கொள்ளல், சிந்திக்கத் தகுந்த பிறப்பாக வாழ்தல் என இவ்விரண்டும் பண்புடைமை என்பது வழக்கு.
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.
எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.
அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.
Benevolence and high born dignity,
These two are beaten paths of courtesy.
Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.
anputaimai aandra kutippiRaththal ivviraNdum
paNpudaimai ennum vazhakku
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
உடல் உறுப்புகள் ஒத்தபடி இருப்பதால் மக்களாக ஒப்புக்கொள்ளக்கூடாது. வெறுக்கத் தகுந்த பண்புகளை வெறுக்க ஒத்திருத்தலே ஒப்பு.
உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.
உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.
நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.
Men are not one because their members seem alike to outward view;
Similitude of kindred quality makes likeness true.
Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.
uRuppoththal makkaLoppu andraal veRuththakka
paNpoththal oppadhaam oppu
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
இன்பம் தரும் ஒழுக்கமுடன் நன்றி செய்த பயனுடையார் பண்பை உலகம் பாராட்டும்.
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.
நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.
Of men of fruitful life, who kindly benefits dispense,
The world unites to praise the 'noble excellence'.
The world applauds the character of those whose usefulness results from their equity and charity.
nayanotu nandri purindha payanudaiyaar
paNpupaa raattum ulagu
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
நகைச் சுவைக்காகக்கூட துன்பம் தரும் அளவிற்கு இகழாமலும், பகைத்துக் கொண்டாலும் பண்புடனும் நடந்துக்கொள்வது பண்பாளர்களின் உடமை.
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.
விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.
Contempt is evil though in sport. They who man's nature know,
E'en in their wrath, a courteous mind will show.
Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.
nakaiyuLLum innaa thikazhchchi pakaiyuLLum
paNpuLa paadaRivaar maattu
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
பண்பாளர்களின் செயல்களால் பின்னியே உலகம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் மன்றாடுதலும் அர்த்தமற்று போகும்.
பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.
பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.
உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும். இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்.
The world abides; for 'worthy' men its weight sustain.
Were it not so, 'twould fall to dust again.
The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.
paNpudaiyaarp pattuNdu ulagam adhuindrael
maNpukku maaivadhu man
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
கூர்மையான வெட்டும் கருவியைப் போன்ற ஆற்றல் உள்ளவர் என்றாலும் மனிதாபிமானம் இல்லாதவர் மரம் போன்றவரே.
மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.
மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.
அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.
Though sharp their wit as file, as blocks they must remain,
Whose souls are void of 'courtesy humane'.
He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.
arampoalum koormaiya raenum marampoalvar
makkatpaNpu illaa thavar
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
நட்பு பாராட்டாமல் நன்மையற்றதை செய்கிறார் என்பதற்காக பண்பற்றுப் போவது இழிவானது.
நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.
தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.
Though men with all unfriendly acts and wrongs assail,
'Tis uttermost disgrace in 'courtesy' to fail.
It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful.
naNpaatraar aaki nayamila seyvaarkkum
paNpaatraar aadhal kadai
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
அடுத்தவருடன் ஒத்திசைவு அடைய வல்லவருக்கு அல்லாமல் மற்றவருக்கு இரண்டு கூறாக இருக்கும் இந்த உலகம் பகல் பொழுதாக இருப்பினும் இருளாகவே இருக்கும்.
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.
நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.
நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.
To him who knows not how to smile in kindly mirth,
Darkness in daytime broods o'er all the vast and mighty earth.
To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light.
nakalvallar allaarkku maayiru Gnaalam
pakalumpaaR pattandru iruL
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
பண்பில்லாதவர் பெற்ற பெருஞ்செல்வம் நல்ல பாலும் அதனுடன் கலக்கும் தீமையால் திரிந்துவிடுதல் போன்று வீணாகிவிடும்.
பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.
நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.
பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்.
Like sweet milk soured because in filthy vessel poured,
Is ample wealth in churlish man's unopened coffers stored.
The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.
paNpilaan petra perunjelvam nanpaal
kalandheemai yaaldhirinh thatru
எளிமையாக எண்களைப் போன்ற வார்த்தைகளால் உறவாடுபவரே பண்பாளர். அவர் ஆன்ற குடியில் பிறந்து அன்போடு இருப்பார். உறுப்புகள் மட்டும் மனிதனாக மாற்றுவது இல்லை வெறுக்க தகுந்ததை செய்யாதவரே மனிதர். கத்தி போல் கூரிய அறிவு இருந்தும் மனித பண்பு இல்லாதவர் மரம் போன்றவர். பண்பாளர்கள் செயல்களே உலக இயக்கத்திற்கு காரணம். பண்பற்றவர் சேர்த்த பெருஞ்செல்வம் பாழே.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.