நந்தி என்பது நல்ல மனதை குறிக்க கூடிய வடிவம். நல்ல மனம் என்பது எப்பொழுதும் இறைவனை பற்றி யோசிப்பது இறைவனை அடைய துடிப்பது போன்றதாகும். லிங்கம் என்பது ஒரு விதமான உணர்வு. நம் மனம் எப்பொழுதும் லிங்கத்தை பார்த்தப்படி இருந்தால் இறைவனை உணர்ந்துவிடலாம் என்பதற்க்காகத்தான் கோயிலில் லிங்கத்தின் முன்பு நந்தியை வைத்துள்ளனர்.
இருவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வேறு ஒருவர் குறுக்கே வந்து தடை செய்தால் “நந்திக்கு குறுக்கே வராதே” என கேட்டிருப்போம். கோயில்களில் பிரதோச நாட்களில் நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என தடை விதிப்பர். சிவன் கோயிலுக்கு சென்றால் அங்கு லிங்கத்தின் முன் நந்தியை வைத்திருப்பர். கூட்டமான நேரத்தில் நமக்கோ சிவன் பூசையை பார்க்க விடாமல் குறுக்கே நந்தி நிற்கிறாறே என கோபம் வரும்.
நாம் எடுத்த உடனே லிங்கத்தை முழுவதும் நினைக்க இயலாது. உடலிலும் மனதிலும் தேவையான மாற்றம் நிகழு வேண்டும். சராசரி மனதில் பல விதமான எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். இறைவனை பார்க்க வேண்டும் என ஒருவருக்கு தோன்றிவிட்டால் இறைவனை பற்றி நினைப்பது படிப்பது பாடுவது என பல விசயங்களில் கவனம் சென்ற பின் எதோ ஒரு வழி நமக்கு கிடைக்கும். உண்மையான குருவின் மூலம் லிங்கத்தினை கண்டு நாம் நினைத்து பழக வேண்டும். லிங்கத்தினை நினைக்கும் பொழுதும் பல எண்ணங்கள் நமக்கு தோன்றும். அதனால் கடவுளை உணர இயலாது. அந்த எண்ணங்களை தான் “நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது” என சொல்கிறோம். கடவுளை உணர வேண்டும் என மிகுதியான ஆர்வம் வந்துவிட்டால் நாம் லிங்கத்தினை தொடர்ந்து நினைத்து எண்ணங்களை சிறிது சிறிதாக குறைத்து இறைவனை கண்டுவிடலாம். பிரதோச நாட்களில் நந்தியின் குறுக்கே செல்வதும், நாம் லிங்கத்தினை பற்றும் பொழுது மனதில் எண்ணங்கள் வருவதும் ஒன்று தான்.
“நந்தி போன்று உள்ளே வராதே” என சொல்வதற்க்கு பதில் “மந்தி போல் உள்ளே வராதே” என சொன்னால் தகும். மந்தி என்பது குரங்கை குறிக்ககூடிய சொல். எப்பொழுதும் எதோ ஒரு எண்ணத்தை அசை போட்டுக்கொண்டே இருக்கும் கட்டுப்பாடில்லாத மனதை மாடு அல்லது குரங்கு என சொல்வர். கட்டுப்பாடுள்ள அல்லது ஒழுக்கமான மனதை நந்தி என சொல்வர். நந்தி என்பது ஒழுக்கத்தின் உயரிய பொருள்.
நந்தியைப்பற்றி தேவையற்ற கதைகளை புறந்தள்ளி நம் மனதை ஒழுக்கமாக லிங்கத்தின் மீது எப்பொழுதும் பார்த்தால் இறைவனை உணரலாம். அனுமான் எப்பொழுதும் இராமரை நினைப்பது போல நாமும் லிங்கத்தின் மீது கவனம் செலுத்தினால் எங்கும் நிறைந்த சிவத்தை உணரலாம். யோசிப்போம், செயல்படுவோம், உயர்வோம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள். நன்றி
~ சசிகுமார் சின்னராஜு.