கோயிலுக்கு சென்று பூஜை முடிந்ததும் கோயில் பூசாரி விபூதி குங்குமம் பிரசாதமாக வழங்குவார். குங்குமம் வைக்கும் இடம் கூட உணர்வாக பல நேரம் வெளிப்படுகிறது. விபூதியை உணர்வு தெரிகிற நெற்றியில் வைத்தால் கூட பரவாயில்லை, பல இடங்களில் வைப்பதால் விபூதிக்கு அர்த்தம் தெரியாமல் பல வருடம் முன்பு யாம் தேடலை தொடங்கினேன். அந்த விபூதியை பற்றி இங்கு பார்ப்போம்.
எனக்கே விபூதி அடிக்கிறியா என வசனத்தை நாம் கேட்டிருப்போம். மற்றவர் நமக்கு மொட்டை அடிப்பது. அதாவது நம்மிடம் உள்ள எல்லா பொருளையும் பிடுங்கிக் கொள்வது என்று அர்த்தம்.
சுடுகாட்டு சிவன் பற்றி கேள்விப்பட்டிருப்போம். சுடுகாடு இடுகாடு நடு காடு என்று மூன்று இருக்கிறது. இடுகாடு என்பது பிணத்தை புதைப்பது, சுடுகாடு என்பது பிணத்தை சுட்டு சாம்பலாக்குவது. உயிர் பிரிந்த பின்பு உடல் மட்டும் இருக்கிறது. அந்த உடலும் சாம்பலாக்கப்பட்டதால் ஒன்றும் இல்லாத தன்மைக்கு சென்று விடுகிறது. ஒன்றுமில்லாத தன்மை இருப்பதால் சிவன் சுடுகாட்டில் வாசம் செய்கிறான் என கதையை படிக்கிறோம். அப்படி என்றால் ஒன்றுமில்லாத தன்மையே சிவன் ஆக நினைத்து வழிபடுகிறோம்.
விபூதியை பெரும்பாலும் நெற்றியில் பட்டை போட்டுகொள்வோம். ஆனால் சிலர் கை, காது மடல், மார்பு, வயிறு, கழுத்து போன்ற பல இடங்களில் வைப்பர். இதுவெல்லாம் உணர்வு பகுதியா என்று கேள்விகள் பல. உணர்வுகள் நெற்றியிலும் உச்சியிலும் வரும், மற்ற இடங்களில் உணர்வு வருவதில்லை. பின்பு எதற்காக கை, கால் மார்புகளில் அதை அணிகிறோம் என தீர்க்கமாக யோசித்தால் சந்தேகம் மறைகிறது. எலும்புகள் சேரும் இடத்திலோ, பள்ளமான, ஓட்டையான அல்லது காலியான இடத்தில் தான் திருநீறு அணிகிறோம். இந்த காலியான இடத்தில் எல்லாம் திருநீறு பூசுவதால் சிவனை மறைமுகமாக வணங்குகிறோம் என அர்த்தமாகிறது. சடங்கானாலும் ஒரு நாள் அதிலிருந்து விடையை தெரிந்து கொள்கிறோம்.
அப்படியென்றால் திருநீறு வெட்டவெளி அல்லது ஒன்றுமில்லாத தன்மையை குறிக்கிறது.
விநாயகர் பூஜை நடந்தது, அங்கு குண்டத்தில் மாங்குச்சி, நவதானியங்கள், பால், நெய் போன்று நிறைய பொருட்கள் போட்டு எரித்து சாம்பலாக்கினார்கள். இந்த சடங்கால் ஏதோ ஒரு உண்மையை முன்னோர்கள் வழி நடத்தி உள்ளனர். பல நாட்கள் ஆலோசனை செய்த பிறகு அதன் ரகசியங்கள் புரிய ஆரம்பித்தது.
குண்டத்தை உடலாகவும், அதிலிருக்கும் விறகை மனதின் எண்ணங்களாகவும், தீயை அக்னியாக நினைத்துக் கொள்ளவும். குண்டத்தில் விறகு போட்டு எரித்து சாம்பலாக்குவது போல் மனதில் உள்ள எண்ணங்களை அக்னியில் போட்டு எரித்து சாம்பலாக்கினால் சிவம் காட்சி கொடுப்பான். சிவத்தன்மை உடலில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இல்லை, உடல் முழுவதும் உள்ளது. உடல் முழுவதும் சாம்பலை பூசிக் கொள்வதால் உடல் எல்லாம் சிவத்தன்மையால் மாற்ற முடியும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் வைக்கலாம்.
திருநீறு செய்யும் முறை:
குண்டத்தில் மாங்குச்சி, நவதானியங்கள், பால், நெய் போன்று நிறைய பொருட்கள் போட்டு எரித்து சாம்பலாக்கியும் திருநீறு செய்கிறார்கள்.
தூய்மையான இடத்தில் வாழும் நாட்டு பசு மாட்டு சாணத்தை எடுத்து, திருநீறு செய்வதற்காகவே சுத்தமான இடத்தில் காய வைத்து அப்பகுதியில் அக்னியில் எரித்து கொடுப்பதாக ஒரு வகை திருநீறு.
விபூதி வைப்பதால் பல நோய்கள் நீங்கும் என பெரியவர்கள் சொல்லி நமக்கு வைத்து விடுவார்கள். இது மறைமுகமான உண்மை. உண்மையிலேயே விபூதி வைப்பதால் அது நடக்காது . விபூதி என்ற வெட்டவெளி தன்மைக்கு சென்றாலோ அல்லது வெட்டவெளி தன்மைக்கு அருகில் சென்றாலோ நமது உடலில் உள்ள வியாதிகள் நீங்கும் என்பது முற்றிலும் உண்மை.
சிலர் விபூதியில் மூலிகை மருந்துகள் கலந்து பூசுவதால் வியாதி நீங்கும் என நம்புகின்றனர் இதுவும் உண்மைதான் ஆனால் மிகவும் அரிதாக குணமாகும்.
நல்லது கெட்டது போன்று அனைத்தும் சாம்பலான பிறகு தான் விபூதி, அதன் மகத்துவத்தை மறக்கக்கூடாது என்பதற்காக சடங்குகளை முன்னோர்கள் பழக்கப்படுத்தி உள்ளனர். அதில் இன்னும் கொஞ்சம் மூலிகை மருந்துகளை கலப்பது தவறு போல் தெரிகிறது.
விபூதியை யார் வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் வைக்கலாம், விதி கிடையாது. குங்குமமும் மஞ்சளும் மாங்கல்யம் உள்ள பெண் தான் வைக்க வேண்டும் என நடைமுறையில் உள்ளது. ஆனால் விபூதிக்கு அப்படி கிடையாது. பயந்தாலும் விபூதி வைத்துக் கொள்கிறோம், வியாதி வந்தாலும் வைத்துக் கொள்கிறோம், விதவைப் பெண்ணும் வைத்துக் கொள்கிறாள், சிறுவர்களும் பெரியவர்களும் , சாதி, மதம் என எந்த பாகுபாடும் கிடையாது. எல்லோரும் விபூதியை வைத்துக் கொள்கிறோம்.
எல்லோருக்கும் அறிவு ஒரே அளவு கிடையாது சிலருக்கு கூடுதலாகவும் பலருக்கு குறைவாகும் இருக்கும். அறிவு கூடுதலாக உள்ளவர்கள் சடங்குகள் எதற்கு, என்ன என தம்மிடமும் பிறரிடமும் சடங்குகளின் விவரங்களை அல்லது ரகசியங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். தேடுதல் உள்ளவர்கள் சடங்கில் இருந்தும் உண்மையே கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் எந்த வகையிலாவது சடங்கை மறக்காமல் பின்பற்றினால் சமூகம் மிக சிறப்பாக இருக்கும்.
எல்லா இடத்திலும் வெட்டவெளி அல்லது சுத்தவெளி தன்மை இருப்பதாக முன்னோர்கள் சொல்கிறார்கள், அதை சிவனாகவும் சிவமாகவும் வழிபடுகிறோம். அதிதீவிர பக்தி உள்ளவர்களால் மட்டுமே வெட்ட வெளி தன்மைக்கு செல்ல முடியும். அந்த வெட்டவெளி தன்மையை எல்லோராலும் உணர விருப்பம் இருக்காது. அந்த வெட்ட வெளித்தன்மையை தான் முன்னோர்கள் திருநீற்று வடிவமாக பல வகையான சடங்குகள் மூலம் பாதுகாத்து வைத்துள்ளனர்.ஏதோ ஒரு வகையில் திருநீறு வைக்கும் பழக்கத்தை மறக்காமல் பின்பற்றினால் சமூகத்துக்கு மிகவும் நல்லது.
மேலே கூறப்பட்ட செய்திகளை தங்கள் மனதால் பகுத்து உணர்ந்து செயல்படுங்கள்.
நன்றி.
~சசிகுமார்