ஆமை புகுந்தால் எப்படி வீடு விளங்காமல் போகும் என இப்பதிவில் பார்ப்போம்.
“ஆமை போல் ஐந்தும் அடக்கித்திரிகின்ற ஊமைக்கு முக்தியடி குதம்பாய்” என குதம்பை சித்தர் ஆமையை புகழ்ந்துள்ளார்.
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து” என திருவள்ளுவர் ஆமையை புகழ்ந்துள்ளார்.
“ஆமை வரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல் ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்?” என பத்ரகிரியார் ஆமையை புகழ்ந்துள்ளார்.
ஆமை தான் விஷ்னுவின் இரண்டாவது அவதாரம். அதாவது மனிதன் கருவில் மீனிலிருந்து ஆமையின் குணத்தை அடைகிறான்.
இப்படி ஆமையை உவமையாக புகழும்போது ஆமை புகுந்தால் வீடு எப்படி விளங்காமல் போகும்.
செய்தி 1:
கடல் அருகில் வாழும் மக்கள் பலர் குடிசை வீட்டில் வசித்தார்கள். ஆமை முட்டை வைப்பதற்க்காக வீட்டு சுவர் ஓரங்களில் சில நேரங்கள் குழி தோண்டும். அப்படி தோண்டும் பொழுது வீட்டுச்சுவர் பலமிழந்து இடிந்து விழுந்துவிடும். அதனால் தான் ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சொன்னார்கள்.
செய்தி 2:
வீட்டில் உள்ளவர்களுக்கு கல்லாமை, முயலாமை போன்று இருந்தால் வாழ்வில் வளர்ச்சி அடையாமல் விளங்காது என்றும் செய்தி.
நமது உடலையும் மனதையும் வீடுன்னு சொல்லலாம். வந்த வேலையை மறந்து குருவிடம் வீடுபேறு அடைவதற்க்கான கல்வியை கற்காமல், கற்றாலும் தினமும் பயிற்சி செய்யாமல் விட்டால் நமது வீடு சுத்தமில்லாமல் விளங்காமல் போய்விடும். இதனால்தான் ஆமை புகுந்த வீடு விளங்காது.
செய்தி 3:
“ஆம்பி பூத்த வீடு விளங்காது ” மறுவி “ஆமை புகுந்த வீடு விளங்காது” என ஒரு செய்தி.
ஆம்பி என்பது காளான் என பொருள் உள்ளது. குப்பையிலும் மக்குன பொருளிலும் சில நேரங்களில் காளான் முளைக்கும். அப்படியென்றால் வீடு சுத்தம் செய்யாமல் பல நாள் விடும்பொழுது காளான் முளைக்கும். அசுத்தமான வீட்டில் வசித்தால் வசிப்போர் அனைவருக்கும் நோய் ஏற்பட்டு மரணம் கூட நிகழலாம். அதுவுமில்லாமல் பல நாட்கள் சுத்தம் செய்யாமல் விட்டால் மக்கும் தன்மை கொண்ட பொருளில் காளான் பூத்து வீட்டிலிருக்கும் பொருள் பலமிலந்து வீடு இடிந்து கூட போகலாம். இதனால் தான் ஆம்பி பூத்த வீடு விளங்காது.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு