அறிவு இருக்கா என்று பல நேரங்களில் திட்டு வாங்கிருப்போம்? அறிவு என்றால் என்ன என்று பார்போம்?
உறுப்புகளை வைத்து உணர்வது அறிவு.
காது என்ற உறுப்பின் மூலம் கேட்பது ஒரு அறிவு.
கண்களால் பார்ப்பது ஒரு அறிவு.
மூக்கால் நுகர்வது ஒரு அறிவு.
நாக்கால் சுவைப்பது ஒரு அறிவு.
தோலால் உணர்வது ஒரு அறிவு.
ஐந்தறிவு தான் வருகிறது, அப்ப மனிதருக்கு ஆறு அறிவு என்று போதிக்கப்படுகிறதே! ஆறாவது அறிவின் உறுப்பு எது?
நமக்கு மனம் என்று இருக்கிறது. ஐந்து புலன்களினால் பெறும் தகவல்களை மனதில் முதலில் பதிகின்றது. சேமித்த தகவலை வைத்து எது நல்லது எது கெட்டது, எது நமக்கு தேவை எது தேவையில்லை என்று பகுத்துப்பார்க்கும் திறன் வருகிறது. அது தான் ஆறாவது அறிவா?
பிறந்த குழந்தையை தாயிடம் இருக்கும் பொழுது அழுவதில்லை, மற்றவரிடம் அழுகிறது. பாதுகாப்பு குறையும் பொழுது அழுகிறது. பசி எடுக்கும் பொழுது அழுகிறது. தனக்கு அசவுரியம் வரும் பொழுதெல்லாம் குழந்தை அழுகிறது. பகுத்து பார்க்கும் திறன் பிறக்கும் போதே இருக்கின்றதா? இதே மாதிரி மிருகம், பறவையிடமும் உள்ளது.
பறவை, மிருகங்களுக்கு எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்று தெரிகிறதே! பறவை, மிருகங்களுக்கு பகுத்துப்பார்க்கும் திறன் உள்ளதே. மனிதர்களுக்கு பகுத்துப்பார்க்கும் திறன் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம். அப்படிப்பட்ட பகுத்தறியும் திறன் எல்லாரிடமும் ஒரே அளவு இல்லை, கூடவும் குறைவாகவும் இருக்கிறது.
பல தகவல்களை மனதில் சேமித்துவைப்பது தான் அறிவா? கிளி சில சொற்களை சொல்கிறது. ஒன்று முதல் பத்து வரை சொல்லும் பொழுது பழக்கப்படுத்தின நாய் தட்டுகிறதே. மனிதனுக்கு அதிகமாக நினைவு திறனும் மற்றவைக்கு குறைவாகவும் இருக்கலாம். வயதாகும் பொழுது நினைவுகளும் மங்குகிறது?
நாளை நடக்கும் சில நிகழ்வுகளையோ அல்லது மற்றவரின் மனதில் இருக்கும் இரகசியங்களையோ சில நேரங்களில் உணர்கிறோம், அது தான் அறிவா?
தூரத்தில் நடக்கும் நிகழ்வுகளை சில நேரங்களில் கேட்பது தான் அறிவா?
மனதை ஒரு நிலைப்படுத்தி ஒரு பொருளை உற்று நோக்கும் பொழுது அதிக தகவலை பெறுகிறோம், அது தான் அறிவா.
பறவை, மிருகங்கள் போன்று மனிதர்கள் பலர் புலனின் இன்பங்களோடு, நிம்மதின்மைகளோடு வாழ்க்கை முடிந்துவிட்டதாக வாழ்ந்து மடிகின்றனர். சிலர் தான் பெரின்பம், நிம்மதியை தேடுகின்றனர். அதில் ஒரு சிலர் வெற்றி அடைகின்றனர். பெரும்பாலான மக்கள் இன்பங்களை உணர்ந்திருப்பார்கள், ஆனால் பேரின்பத்தை உணர்ந்திருக்கமாட்டார்கள். அந்த பேரின்பத்தை உணர்வது தான் ஆறாவது அறிவா?
சிலைகளில் சங்கு வைக்கப்பட்டிருக்கும், அதன் அர்த்தம் நாதத்தை கேட்கமுடியும். நாதத்தை எப்பொழுதும் கேட்பது தான் அறிவா?
சிலைகளில் சக்கரம் வைக்கப்பட்டிருக்கும், அதன் அர்த்தம் ஓடிக்கொண்டிருக்கும் சக்கரம் நின்று விடுவது போல மனதில் எண்ணமில்லாத நிலையை உணர்ந்திருப்பர். அந்த எண்ணமில்லாத நிலையை உணர்வது தான் ஆறாவது அறிவா?
ஒரு முறை சிவம்( அன்பு ) என்ற தன்மையை உணர்ந்தேன், அது தான் ஆறாவது அறிவா?
கடவுளை உணர்வது தான் அறிவா? இல்லை கடவுள் தான் அறிவா?
முழுமையான அறிவு வளராத ஒருவன் அறிவை பற்றி என்னால் முடிந்த கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளேன். முழுமையான அறிவை ஒருநாள் உணருவேன் என்ற நம்பிக்கையில்…
வயதாகும் பொழுது அறிவு குறைவதை பார்க்கலாம். கண் தெரியாமல் போகலாம், காது கேட்காமல் போகலாம், சுவை உணராமல் போகலாம். சிலருக்கு தொடுதல் உணர்வு மறைந்து போகலாம். வாசம் நுகராமல் போகலாம். அதற்க்கு முன்பே முழுமையான அறிவு எது என்று தேடினால் சிறப்பு.
தொல்காப்பியம்( மரபியல் ) பகுதியிலிருந்து
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
புல்லும் மரமும் ஓர் அறிவினவே
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே.
திருமந்திரம் – 741
உற்றறிவு ஐந்தும், உணர்ந்தறிவு ஆறு ஏழும்
சுற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றறியாது அழிகின்ற வாறே.
அவ்வைகுறள் ( உள்ளுணர்வு ):
ஆதியோ டொன்று மறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம்.
அவ்வைகுறள் ( மெய்யகம் ):
தோன்றாத தூயவொளி தோன்றியக் காலுன்னைத்
தோன்றாமற் காப்ப தறிவு.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு